இந்தியா

ஜனசேனா சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் தலைவர் பவன் கல்யாண் தேர்வு

Published On 2024-06-11 05:46 GMT   |   Update On 2024-06-11 07:23 GMT
  • மிக பிரம்மாண்டமான அரங்கில் நாளை சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்வர் பதவி ஏற்க உள்ளார்.
  • நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 21 இடங்களில் வெற்றி பெற்று மாநிலத்தின் 2-வது பெரிய கட்சியாக ஜனசேனா உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. 175 பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளையும், 25 பாராளுமன்ற தொகுதிகளில் 21 தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 11 சட்டசபை மற்றும் 4 பாராளுமன்ற தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது.

இந்நிலையில், கிருஷ்ணா மாவட்டம், கன்னவரம் அருகே உள்ள கேசரபல்லி ஐடி பார்க் மைதானத்தில் 14 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமான அரங்கில் நாளை சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்வர் பதவி ஏற்க உள்ளார். பிரதமர் மோடி, பல்வேறு மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்ள், விஐபிக்கள் விழாவில் பங்கேற்கின்றனர்.

இதனிடையே தேர்தல் வெற்றியை உறுதி செய்ததில் ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு பெரும் பங்குண்டு உள்ளதால் அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஜனசேனா சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் தலைவர் பவன் கல்யாண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



மங்களகிரியில் உள்ள ஜனசேனா கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூடி சட்டமன்ற கட்சி தலைவரை தேர்வு செய்தனர். இந்த கூட்டத்தில் ஜனசேனா கட்சியின் சட்டமன்ற தலைவராக பவன் கல்யாண் பெயரை மூத்த தலைவர் நாதெண்டலா மனோகர் முன்மொழிந்தார். இதற்கு அனைத்து எம்எல்ஏக்களும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்ததால், ஜனசேனா சட்டமன்ற கட்சி தலைவராக பவன் கல்யாண் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 21 இடங்களில் வெற்றி பெற்று மாநிலத்தின் 2-வது பெரிய கட்சியாக ஜனசேனா உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News