இந்தியா (National)

அயோத்தி தீபாவளி விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

Published On 2022-10-18 05:23 GMT   |   Update On 2022-10-18 05:23 GMT
  • ராமர் கோவிலுக்கு சென்று வழிபாடுகள் செய்யவும் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
  • அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள் 50 சதவீதம் நிறைவு பெற்று உள்ளன.

லக்னோ:

அயோத்தியில் தீபாவளி பண்டிகை வருகிற ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாட்கள் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக அயோத்தியில் ஞாயிற்றுக்கிழமை 17 லட்சம் தீபங்கள் ஏற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சி உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் வகையில் தீபங்கள் ஏற்றுவதற்கான இடங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

அயோத்தியில் நடக்கும் தீபாவளி திருவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்காக அவர் வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலை அயோத்தி செல்கிறார். முன்னதாக வெள்ளிக்கிழமை அவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், கேதர்நாத் தலங்களுக்கு செல்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை அயோத்தியில் தீபம் ஏற்றி பிரதமர் மோடி தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபடுகிறார். சரயு நதிக்கரையில் இருந்தபடி அவர் ஆரத்தி எடுக்கப்படுவதையும், டிஜிட்டல் முறையில் பட்டாசுகள் வெடிக்கப்படுவதையும் பார்வையிட உள்ளார்.

இதையடுத்து ராமர் கோவிலுக்கு சென்று வழிபாடுகள் செய்யவும் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள் 50 சதவீதம் நிறைவு பெற்று உள்ளன. இது தொடர்பாகவும் அவர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்ய உள்ளார்.

Tags:    

Similar News