இந்தியா

உலகிலேயே பழமையான மொழியான தமிழின் பெருமையை நாம் வளர்க்க வேண்டும்- பிரதமர் மோடி

Published On 2022-11-19 10:47 GMT   |   Update On 2022-11-19 10:47 GMT
  • இந்திய பன்முகத்தன்மையின் கொண்டாட்டமாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி திகழ்கிறது.
  • தேச ஒற்றுமைக்கான முன்னெடுப்பு தமிழ் சங்கத்தின் மூலம் தொடங்கியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் பல்கலைக்கழகத்தில் காசி தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

முன்னதாக தமிழ் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், காசி தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அனைவரையும் வரவேற்று பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

வணக்கம் காசி, வணக்கம் தமிழ்நாடு. நாடு, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றின் சங்கமமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு இந்த சங்கமமே சாட்சி. காசி தமிழ் சங்கமம் கங்கை, யமுனை சங்கமத்தை போல பவித்திரமானது.

காசிக்கும், தமிழகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இந்திய பன்முகத்தன்மையின் கொண்டாட்டமாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி திகழ்கிறது. காசியும், தமிழ்நாடும் கலாச்சாரத்தில் சிறந்து விளங்குகிறது.

தமிழகத்தின் கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். காசி விஸ்வநாதரும், ராமேஸ்வரத்தின் ராமேஸ்வரரும் நமக்கு அருள்புரிந்து வருகின்றனர். காசி மற்றும் ராமேஸ்வரத்தில் சிவமும், சக்தியும் உள்ளது.

ஒரே பாரதம் என்ற கனவை நினைவாக்கும் நிகழ்ச்சியாக காசி தமிழ்ச்சங்கமம் விளங்குகிறது. காசி பட்டு போல, காஞ்சிபுரம் பட்டும் சிறப்பு வாய்ந்தது. காசிக்கு துளசிதாசர் என்றால், தமிழகத்திற்கு திருவள்ளுவர்.

தமிழக திருமணங்களில் காசி யாத்திரை என்ற பாரம்பரியம் உள்ளது. காசியின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்கு அதிகம் உள்ளது. பாரதியார் காசியில் பயன்றார். பல ஆண்டுகாலம் இங்கு வாழ்ந்துள்ளார். காசி தமிழ் சங்கமம் ஒருவருக்கொருவர் புரிந்த கொண்டு நடக்க வேண்டும் என்பதை கூறுகிறது.

சுதந்திரம் அடைந்த உடனேயே தேச ஒற்றுமைக்கான முன்னெடுப்பை நாம் துவங்கியிருக்க வேண்டும். தேச ஒற்றுமைக்கான முன்னெடுப்பு தமிழ் சங்கத்தின் மூலம் தொடங்கியுள்ளது.

காசியில் திருப்புகழையும், முருகனையும் பற்றி பாடிய பாடல்கள் கிடைத்துள்ளன. ராஜாஜி எழுதிய ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் படிக்க வேண்டும் என்று எனது ஆசிரியர் கூறினார்.

உலகிலேயே பழமையான மொழியான தமிழின் பெருமையை நாம் வளர்க்க வேண்டும். நாட்டின் 130 கோடி மக்களும் தமிழ் மொழியை காண வேண்டும், அதை பாதுகாக்க வேண்டும். காசி தமிழ் சங்கமம் என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு அனுபவமாக இருக்கும்.

Tags:    

Similar News