அதானியை பாதுகாப்பதில் மட்டுமே மோடி கவனமாக இருக்கிறார்- ராகுல் காந்தி கண்டனம்
- மோடி அவர்களே, சாமானிய மக்களுக்கு எப்போது பாதுகாப்பு கிடைக்கும்?
- ரெயில்வே துறையின் அலட்சியம், குறைந்த ஆள்சேர்ப்பு ஆகியவைதான் இந்த உயிரிழப்புக்கு காரணம்.
புதுடெல்லி:
லக்னோ-பரவுனி இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில், பீகார் மாநிலம் பரவுனி ரெயில் நிலையத்தில் நேற்று வந்தடைந்தது. அப்போது ரெயில் பெட்டிகளை என்ஜினுடன் இணைக்கும் பணியில், அருண்குமார் ராவத் என்ற ஊழியர் ஈடுபட்டு இருந்தார்.
அந்த சமயத்தில் ரெயில் பெட்டிகளுக்கு இடையில் ஊழியர் இருப்பதைக் கவனிக்காத லோகோ பைலட், ரெயிலை இயக்கியுள்ளார். ரெயிலை முன்னோக்கி இயக்குவதற்கு பதிலாக பின்னோக்கி இயக்கியதால், பெட்டிகளுக்கு இடையில் இருந்த அருண் குமார் உடல் நசுங்கி பலியானார்.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டதையடுத்து, லோகோ பைலட் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இந்த நிலையில் ரெயில்வே துறையின் அலட்சியத்தால்தான் ஊழியர் பலியானதாக பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ்தள பதிவில் கூறியதாவது:-
மோடி அவர்களே, சாமானிய மக்களுக்கு எப்போது பாதுகாப்பு கிடைக்கும்? அதானியை பாதுகாப்பதில் மட்டுமே நீங்கள் கவனமாக இருக்கிறீர்கள். ரெயில்வே துறையின் அலட்சியம், குறைந்த ஆள்சேர்ப்பு ஆகியவைதான் இந்த உயிரிழப்புக்கு காரணம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.