பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்தப்படுமா? பாராளுமன்ற நிலைக்குழு 22-ந்தேதி ஆலோசனை
- மசோதா காலாவதி ஆனபோதிலும், பெண்கள் திருமண வயது பற்றி விவாதிக்க தடையில்லை என்று குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
- புதிய கல்வி கொள்கை பற்றியும் கூட்டத்தில் பேசப்படுகிறது.
புதுடெல்லி:
இந்தியாவில் ஆண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21 ஆகவும், பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆகவும் உள்ளது. அதற்கு குறைவான வயதில் திருமணம் செய்து கொள்வது குழந்தை திருமணமாக கருதி, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கிடையே, கடந்த 2006-ம் ஆண்டின் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்து, கடந்த 2021-ம் ஆண்டு குழந்தை திருமண தடுப்பு திருத்த மசோதா உருவாக்கப்பட்டது. திருமண வயதை ஆண், பெண் இருபாலாருக்கும் 21 ஆக ஒரேமாதிரி நிர்ணயிக்க அம்மசோதா வகை செய்கிறது.
அது, 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், பாராளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நிலைக்குழுவின் பதவிக்காலம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது.
இருப்பினும், ஆய்வு முடியாத நிலையில், இந்த ஆண்டு 17-வது மக்களவை பதவிக்காலம் முடிவடைந்ததால், மசோதா காலாவதி ஆனது.
இருப்பினும், பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது பற்றி கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், விளையாட்டு ஆகியவை தொடர்பான பாராளுமன்ற நிலைக்குழு ஆலோசனை நடத்த உள்ளது. இக்குழு காங்கிரஸ் எம்.பி. திக்விஜய்சிங் தலைமையில் செயல்படுகிறது.
வருகிற 22-ந் தேதி, பாராளுமன்ற நிலைக்குழுவின் கூட்டம் நடக்கிறது. அதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக செயலாளர், இளைஞர் குரல் இயக்கத்தின் பிரதிநிதிகள்ஆகியோர் குழுவின் முன்பு ஆஜர் ஆகிறார்கள்.
பெண்களின் திருமண வயதை உயர்த்துவது பற்றி ஆலோசிப்பதுடன், தேசிய பெண்கள் ஆணையம், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளின் செயல்பாடுகள் பற்றியும் விவாதிக்கப்படுகிறது.
மசோதா காலாவதி ஆனபோதிலும், பெண்கள் திருமண வயது பற்றி விவாதிக்க தடையில்லை என்று குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
புதிய கல்வி கொள்கை பற்றியும் கூட்டத்தில் பேசப்படுகிறது. பள்ளி கல்வித்துறை செயலாளர், பள்ளி ஆசிரியர் அமைப்புகள் ஆகியோர் பள்ளிக்கல்வியில் புதிய கல்வி கொள்கை ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி தெரிவிக்கிறார்கள்.
சமக்ரா சிக்ஷா அபியான் திட்டம் பற்றியும், என்.சி.இ.ஆர்.டி., கேந்திரிய வித்யாலயா சங்கதன், நவோதயா வித்யாலயா சமிதி ஆகிய அமைப்புகளின் செயல்பாடுகள் பற்றியும் விவாதிக்கப்படுகிறது.