இந்தியா

நகரி தொகுதியில் 3-வது முறையாக வெற்றி முனைப்பில் ரோஜா

Published On 2024-03-20 09:52 GMT   |   Update On 2024-03-20 09:52 GMT
  • 3-வது முறையாக நகரியில் நடிகை ரோஜா வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
  • தெலுங்கு தேசம், பா.ஜ.க நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா என கூட்டணி பலமாக உள்ளது.

திருப்பதி:

ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா 3-வது முறையாக நகரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

1999-ம் ஆண்டு அரசியலில் அடியெடுத்து வைத்த ரோஜா தெலுங்கு தேசம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 2011-ம் ஆண்டு ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

2014-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ரோஜாவுக்கு தமிழக எல்லையில் உள்ள நகரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. தமிழர்கள் கணிசமாக வசிக்கும் அந்த தொகுதியில் ரோஜாவிற்கு வரவேற்பும் கிடைத்தது.

அந்த தேர்தலில் 73 ஆயிரத்து 924 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் கலிமுத்து கிருஷ்ணம்மா என்பவரை 858 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

அப்போது எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்த ரோஜா பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு தொகுதி மக்களிடம் மேலும் பெயர் பெற்றார்.

இதனால் 2019-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஜெகன் மோகன் ரெட்டி அவருக்கு போட்டியிட வாய்ப்பு அளித்தார்.

2-வது முறையாக நகரி தொகுதியில் போட்டியிட்ட ரோஜா அந்த தேர்தலில் 80,333 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் கலிபானு பிரகாஷ் என்பவரை 2,708 வாக்குகள் வித்தியாசத்தில் ரோஜா வீழ்த்தினார். இதனால் ரோஜாவுக்கு சுற்றுலா துறை மந்திரி பதவியும் கிடைத்தது.

ஆளுங்கட்சி மந்திரியான ரோஜா அவரது கட்சி, ஜெகன் மோகன் ரெட்டி பற்றி யார் விமர்சித்தாலும் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வந்தார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவே நகரி தொகுதியில் பொதுமக்களை வீடுவீடாக சந்தித்து ஏன் மீண்டும் வேண்டும் ஜெகன் அண்ணா என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

மேலும் அவரது தொகுதியில் உள்ள கிராமங்களில் இரவு நேரங்களில் தங்கி இருந்து அந்த மக்களுக்கு என்னென்ன அடிப்படை வசதிகள் தேவை என்பதை கண்டறிந்து பூர்த்தி செய்தார்.

ஆடுதாம் ஆந்திரா என்ற பெயரில் மாநிலம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

நகரி தொகுதியில் ஒவ்வொரு கிராமங்களுக்கும் ரோஜா நேரில் சென்று போட்டிகளை தொடங்கி வைத்தார். அப்போது இளைஞர்களுடன் கபடி விளையாடி அசத்தி கவர்ந்தார்.

நகரி தொகுதியில் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடந்த பிரமாண்ட விழாவில் ஜனசேனா கட்சித் தலைவரான நடிகர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடு ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்தார். அந்தக் கூட்டத்தில் ரோஜா பேசுகையில்

நடிகர் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் ஒரு வசனம் வரும். குறைக்காத நாயும் இல்லை. குறை சொல்லாத வாயும் இல்லை இது ரெண்டும் இல்லாட்டி ஊரும் இல்லை. புரிஞ்சிதா ராஜா அர்த்தமாய்ந்தா ராஜா என்றார். இது ரஜினி ரசிகர்கள் அவர் மீது வைத்திருந்த விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளியாக அமைந்தது.

எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனாக திகழ்ந்துவரும் ரோஜாவுக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பே கிடைக்காது. அவர் தொகுதி மாறிவிடுவார் எம்.பி.தேர்தலில் போட்டியிடப் போகிறார் என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.

அதையெல்லாம் தாண்டி 3-வது முறையாக நகரியில் நடிகை ரோஜா வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

இந்த முறையும் அவரை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கலிபானு பிரகாஷ் போட்டியிடுகிறார். ஆந்திராவைப் பொறுத்தவரை தெலுங்கு தேசம், பா.ஜ.க நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா என கூட்டணி பலமாக உள்ளது.

ஆனால் ரோஜா சார்ந்துள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது. நகரி தொகுதியில் உள்ள ஒய். எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் சிலர் ரோஜா மீண்டும் போட்டியிட எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ரோஜா ஈடுபட்டு வருகிறார். கட்சி தொண்டர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.

3-வது முறையாக நகரி தொகுதியில் வெற்றி பெறும் முனைப்பில் ரோஜா தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

ஜெகன்மோகன் ரெட்டி கட்சியின் முக்கிய தலைவராக வலம் வரும் ரோஜாவை இந்த தேர்தலில் எப்படியாவது வீழ்த்த வேண்டும் என தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு தேர்தல் வேலையில் இறங்கி உள்ளன.

Tags:    

Similar News