இந்தியா

பார்வையில்லாத ஆசிரியருக்கு வழிகாட்டும் பள்ளி மாணவிகள்

Published On 2023-12-15 03:49 GMT   |   Update On 2023-12-15 03:49 GMT
  • ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுப்பது முந்தைய காலம், தற்போதைய காலம் என்று பிரிக்க முடியாத அளவுக்கே தற்போதைய மாணவர்களும் உள்ளனர்.
  • தனது தொழிலில் தனித்துவத்துடன் இருக்கக்கூடிய ஆசிரியர்கள், அனைத்து மாணவர்களின் மனதையும் கொள்ளை கொண்டு விடுகின்றனர்.

கல்வி என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்றாகும். அது ஒருவரை நல்வழிப்படுத்துவது மட்டுமின்றி, எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் தருவதாக இருக்கிறது. அப்படிப்பட்ட கல்வியை போதிக்கும் ஆசிரியர்கள் போற்றத்தக்கவர்கள் ஆவர்.

உயர்ந்தவன் தாழ்ந்தவன், வசதி படைத்தவன் வசதி இல்லாதவன் என அவர்கள் எதையும் பார்க்காமல் மாணவ-மாணவிகளுக்கு பாடங்களை கற்பித்து கொடுக்கிறார்கள். இதன் மூலம் ஒருவருக்கு சிறப்பான எதிர்காலத்தை கொடுப்பதே ஆசிரியர்கள் தான் என்றே கூறலாம்.

இதனால் ஒருவர் யாரை மறந்தாலும் தனக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்களை மறப்பதில்லை. தாய்-தந்தை அடுத்தபடியாக ஆசிரியரை கூறுகிறார்கள். 2000-ம் ஆண்டுக்கு முந்தைய காலக்கட்டத்தை சேர்ந்தவர்கள் ஆசிரியர்களை தெய்வமாகவே மதித்தார்கள் என்று கூறலாம்.

ஆசிரியர்களில் பலர் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது மட்டுமின்றி, நல்லது-கெட்டது, எதிர்காலத்துக்கு அவசியமானது என அனைத்தையும் சொல்லிக் கொடுத்து அவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாகவும் விளங்குகின்றனர் என்றால் மிகையல்ல. அப்படிப்பட்ட ஆசிரியர்களை யாரும் மறந்து விட முடியாது.

நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகள் இல்லாத முந்தைய காலக்கட்டங்களில் படித்தவர்கள், தற்போது நடத்தும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் உடன் படித்த மாணவர்கள் மட்டுமின்றி, தங்களுக்கு கல்வியறிவை கொடுத்த ஆசிரியர்களை கவுரவிப்பதை காண முடிகிறது.

ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுப்பது முந்தைய காலம், தற்போதைய காலம் என்று பிரிக்க முடியாத அளவுக்கே தற்போதைய மாணவர்களும் உள்ளனர். தனது தொழிலில் தனித்துவத்துடன் இருக்கக்கூடிய ஆசிரியர்கள், அனைத்து மாணவர்களின் மனதையும் கொள்ளை கொண்டு விடுகின்றனர்.

அவர்களுக்கு தனது தாய்-தந்தைக்கு செய்வதைப் போன்று அனைத்து உதவிகளையும் செய்கிறார்கள். அப்படித்தான் கேரளாவில் கண் பார்வையற்ற ஒரு ஆசிரியருக்கு பஸ்சில் இருந்து இறங்கி பள்ளிக்கு வருவதற்கு, வகுப்பறைக்கு செல்வதற்கு என அனைத்து இடங்களுக்கும் கையை பிடித்து அழைத்துச் சென்று மாணவிகள் உதவி வருகிறார்கள்.

கண் பார்வையற்ற ஆசிரியருக்கு உதவும் மாணவிகள் பற்றிய விவரம் வருமாறு:-

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி கருக்குட்டி எடக்கன்னு பகுதியை சேர்ந்தவர் வேலாயுதன். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் சிறுவயதில் இருந்தே படிப்பில் ஆர்வம் மிக்கவராக இருந்துள்ளார். இந்த நிலையில் தனது எட்டாவது வயதில் கண் பார்வையை முற்றிலும் இழந்தார்.

கண் பார்வையை இழந்தாலும் தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் வேலாயுதன். அவர் கோட்டயத்தில் உள்ள பார்வையற்றோருக்கான பள்ளியில் தனது படிப்பை தொடர்ந்தார். அங்கு கண் பார்வையற்றோருக்கான பிரெய்லி முறையில் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டார்.

பின்பு திருச்சூர் மாவட்டம் குன்னம்குளம் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த அவர், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து சிறப்பாக படித்த அவர், ஆசிரியர் பணியில் சேருவதை இலக்காக நிர்ணயித்தார்.

இதற்காக திருச்சூர் கேரள வர்மா கல்லூரியில் எம்.ஏ. படிப்பை முடித்தார். பின்பு பாலக்காடு மாவட்டம் ஒட்டப்பாலம் என்.எஸ்.எஸ். கல்லூரியில் பி.எட். படிப்பை முடித்தார். அதன் பிறகு வேலாயுதன் ஆசிரியர் பணிக்காக பல தனியார் பள்ளிகளின் கதவை தட்டினார்.

ஆனால் யாரும் அவருக்கு வேலைகொடுக்க தயாராக இல்லை. இதனால் வேலாயுதன் வாழ்வாதாரத்திற்காக லாட்டரி சீட்டு விற்க தொடங்கினார். 11 ஆண்டுகளாக லாட்டரி விற்கும் தொழிலிலேயே ஈடுபட்டு வந்தார். அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ்க்கையை நடத்தி வந்தார்.

அதன் பிறகு அட்டப்பாடியில் உள்ள ஒரு பள்ளியில் பாடம் எடுக்கும் வாய்ப்பு வேலாயுதனுக்கு கிடைத்தது. அங்கு சில நாட்கள் மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்திய அவர் மீண்டும் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு உயர் நிலை ப்பள்ளி உதவியாளர் தரவரிசை பட்டியலில் வேலாயுதன் முதல் இடத்தை பிடித்தார். இதன்மூலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா முப்பத்தடம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தார். அங்கு சமூக அறிவியல் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

அங்கமாலியில் தங்கி இருந்த அவர், முப்பத்தடம் அரசு பள்ளிக்கு தினமும் ஒன்றரை மணி நேரம் பயணித்து வர வேண்டி இருந்தது. பார்வையற்றவரான அவருக்கு அந்த பயணம் மிகவும் சவாலாக இருந்தது. இதனால் தனது ஊருக்கு அருகில் உள்ள பள்ளியில் பணிபுரிய விரும்பினார்.

அதற்கு தகுந்தாற் போல் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அவர் பணி மாறுதல் பெற்றார். கண் பார்வையற்றவராக இருந்தாலும் அவர் பாடம் எடுக்கும் முறை பெரும்பாவூர் பள்ளி மாணவிகளுக்கு மிகவும் பிடித்து விட்டது.

இதனால் மாணவிகளுக்கு பிடித்த ஆசிரியராக வேலாயுதன் மாறிவிட்டார். கண் பார்வையற்ற அவருக்கு, தங்களின் தாய்-தந்தைக்கு செய்வது போன்று அனைத்து உதவிகளையும் செய்ய மாணவிகள் ஆர்வமுடன் முன் வந்தனர்.

தினமும் காலையில் தனது ஊரிலிருந்து பஸ்ஸில் பள்ளிக்கு வரும் அவரை, பஸ் நிறுத்தத்தில் இருந்து பள்ளி வரை மாணவிகள் கையை பிடித்து அழைத்து வருகிறார்கள். பின்பு மாலையில் பள்ளி முடிந்ததும் பள்ளியில் இருந்து பஸ் நிறுத்தத்திற்கும் கையை பிடித்து அழைத்துச் சென்று பஸ்சில் ஏறிச் செல்ல உதவுகிறார்கள்.

அதுமட்டுமின்றி பள்ளியில் இருக்கும்போது பணியாளர் அறையில் இருந்து வகுப்பறைக்கும் கையை பிடித்து அழைத்துச் சென்று உதவி செய்கிறார்கள். கண் பார்வையில்லாத ஆசிரியர் வேலாயுதனுக்கு, அவரிடம் படிக்கும் மாணவிகளே கண்களாக இருந்து வழிகாட்டியாக இருக்கிறார்கள்.

இது பற்றி ஆசிரியர் வேலாயுதன் கூறும்போது, குழந்தைகள் என்னிடம் ஈடு இணையற்ற அன்பை கொடுக்கிறார்கள் என்று கூறினார். ஆசிரியர் வேலாயுதன் பற்றி மாணவிகள் கூறும்போது, மிகவும் அமைதியானவர். நன்கு பாடம் எடுப்பார். பாட்டும் பாடுவார். இதனால் அவரை எங்களுக்கு பிடிக்கும் என்றனர்.

பார்வையற்ற ஆசிரியருக்கு மாணவிகள் செய்யும் இந்த சேவையை அதே பள்ளியில் பணிபுரியக்கூடிய ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் மட்டுமின்றி பெரும்பாவூர் பகுதியை சேர்ந்த பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

மாணவிகளுக்கு பிடித்த ஆசிரியராக வேலாயுதன் உள்ளார். இதனால் அவரிடம் படிக்கும் மாணவிகள், கண் பார்வையில்லாத வேலாயுதனின் கண்களாக உள்ளனர் என்பதே மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது.

Tags:    

Similar News