எனது வேட்பு மனுவை வாபஸ் பெற ராகுல் காந்தியிடம் வலியுறுத்திய நிர்வாகிகள்- சசி தரூர் எம்.பி. பரபரப்பு தகவல்
- தேர்தலில் நான் போட்டியிடுவதை மூத்த நிர்வாகிகள் பலர் விரும்பவில்லை.
- சிலர் ராகுல் காந்தியை சந்தித்து எனது வேட்பு மனுவை வாபஸ் பெறக்கூறுமாறு தெரிவித்து உள்ளனர்.
திருவனந்தபுரம்:
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வருகிற 17-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலில் கர்நாடகாவை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கேவும், கேரளாவை சேர்ந்த சசிதரூரும் போட்டியிடுகிறார்கள். மல்லிகார்ஜூன கார்கேவுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தியின் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.
இதுபோல பல்வேறு மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்களும் மல்லிகார்ஜூன கார்கேவுக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் சசிதரூருக்கு அவரது சொந்த மாநிலமான கேரளாவில் கூட ஆதரவு இல்லை. கேரள மாநில காங்கிரஸ் தலைவரும் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். இதுபற்றி சசிதரூர் கூறியதாவது:-
தேர்தலில் நான் போட்டியிடுவதை மூத்த நிர்வாகிகள் பலர் விரும்பவில்லை. அவர்களில் சிலர் ராகுல் காந்தியை சந்தித்து எனது வேட்பு மனுவை வாபஸ் பெறக்கூறுமாறு தெரிவித்து உள்ளனர்.
அதற்கு அவர் மறுத்து விட்டார். தலைவரை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.