திருப்பதி கோவிலுக்கு சென்றபோது சென்னை பக்தர்களின் கார் நடுரோட்டில் தீ பிடித்து எரிந்தது
- ஆந்திர மாநிலம் பாலாஜி கோல்டன் சிட்டி அருகே சென்றபோது கார் என்ஜினில் இருந்து புகை வந்தது.
- காரின் என்ஜின் பகுதியில் கம்பிகள் அறுந்து கிடந்ததால் மின் கசிவு ஏற்பட்டு கார் தீப்பிடித்து எரிந்தது தெரிய வந்தது.
திருப்பதி:
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் சுந்தரராஜ். இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினர் 4 பேருடன் நேற்று திருப்பதி கோவிலுக்கு காரில் சென்றனர்.
ஆந்திர மாநிலம் பாலாஜி கோல்டன் சிட்டி அருகே சென்றபோது கார் என்ஜினில் இருந்து புகை வந்தது.
இதனை கண்டு திடுக்கிட்ட சுந்தரராஜ் உடனடியாக காரை சாலையோரம் நிறுத்திவிட்டு சரி செய்ய முயன்றார்.
காரில் இருந்து அதிக அளவில் புகை வந்ததால் அதனை திறக்க முடியவில்லை. இதனால் பதற்றம் அடைந்த சுந்தரராஜ் அசம்பாவித சம்பவம் நடக்கப் போவதாக எண்ணினார். தனது குடும்பத்தினரை காரில் இருந்து வெளியேறுமாறு கூறினார்.
அவரது குடும்பத்தினர் காரை விட்டு இறங்கி ஓடினர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே திடீரென காரில் பெரிய அளவில் தீ பரவியது.
அவர்கள் கண்முன்னே கார் முழுவதும் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் கார் முழுவதும் எரிந்து நாசமானது.
காரின் என்ஜின் பகுதியில் கம்பிகள் அறுந்து கிடந்ததால் மின் கசிவு ஏற்பட்டு கார் தீப்பிடித்து எரிந்தது தெரிய வந்தது.
சுந்தர்ராஜ் தனது குடும்பத்தினரை முன்னெச்சரிக்கையாக காரில் இருந்து உடனடியாக வெளியேற கூறியதால் அதிர்ஷ்டவசமாக 4 பேர் உயிர் தப்பினர்.
இந்த சம்பவத்தால் நகரி சாலையில் போக்குவரத்து பாதிக்கபட்டது.