இந்தியா

நாட்டில் வேலையின்மை விகிதம் அதிகரிக்கவில்லை: மத்திய அரசு அறிக்கை

Published On 2023-01-05 02:45 GMT   |   Update On 2023-01-05 02:45 GMT
  • தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் செய்திகுறிப்பு வெளியிட்டுள்ளது.
  • வேலையின்மை விகிதம் அதிகம் இருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

புதுடெல்லி :

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தனியார் நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வின் அடிப்படையில், 2022-ம் ஆண்டு டிசம்பரில் நாட்டில் வேலையின்மை விகிதம் அதிகம் இருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. பல தனியார் நிறுவனங்கள் தங்களது சொந்த முறைகளின் அடிப்படையில் ஆய்வுகளை நடத்துகின்றன. அவை பொதுவாக அறிவியல் அல்லது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் இல்லை. மேலும், இந்த நிறுவனங்கள் பயன்படுத்தும் முறையானது, பொதுவாக சார்புநிலையைக் கொண்டுள்ளது. இத்தகைய ஆய்வுமுடிவுகள் கவனமாக பயன்படுத்தப்பட வேண்டும்.

''வேலைவாய்ப்பு-வேலையின்மை'' பற்றிய அதிகாரப்பூர்வ தரவுகள், காலமுறை தொழிலாளர் குழு கணக்கெடுப்பின் அடிப்படையில் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் வெளியிடப்படுகிறது. சமீபத்திய வருடாந்திர அறிக்கை, 2020-ம் ஆண்டு ஜூலை முதல், 2021-ம் ஆண்டு ஜூன் வரையிலான காலத்துக்கு உரியது.

2022-ம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டு அறிக்கை நகர்ப்புறங்களுக்கான புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கைகளின்படி, 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான வேலை வாய்ப்பு விகிதம் 2022-ம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் 44.5 சதவீதமாக இருந்தது. 2019-ம் ஆண்டில் இது 43.4 சதவீதமாக இருந்தது.

வேலையின்மை விகிதம் 2022-ம் ஆண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 7.2 சதவீதமாகவும், 2019-ல் அதே காலக்கட்டத்தில் 8.3 சதவீதமாகவும் இருந்தது. எனவே, காலமுறை தொழிலாளர்குழு கணக்கெடுப்பின் தரவுகள், கொரோனா காலத்துக்கு முந்தைய நிலையைவிட உயர்ந்த மட்டத்தில் உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News