கர்நாடகாவில் தண்டவாளத்தில் நடுவில் படுத்து ரெயிலில் சிக்காமல் உயிர் தப்பிய பெண்
- பெண் தண்டவாளத்தை கடக்க முடியவில்லை.
- சம்பவம் தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்து எலஹங்கா அருகே ராஜன குண்டே ரெயில் நிலையம் அமைந்துள்ளது.
இந்த ரெயில் நிலையத்தில் பெண் ஒருவர் நடந்து சென்றார். அவர் அங்கிருந்த தண்டவாளம் வழியாக நடந்து சென்றபோது அவருக்கு பின்னால் சரக்கு ரெயில் ஒன்று வேகமாக வந்தது. தண்டவாளத்தில் பெண் நடந்து சென்றதை பார்த்த ரெயில் டிரைவர் ஹாரன் அடித்துள்ளார்.
ஆனால் அந்த பெண் தண்டவாளத்தை கடக்க முடியவில்லை. உடனே சுதாரித்துக்கொண்ட அந்த பெண் தண்டவாளத்தில் கை, கால்களை நீட்டியபடி படுத்து கொண்டார்.
இதையடுத்து அந்த சரக்கு ரெயில் அவரை கடந்து சென்றது. தண்டவாளத்தில் படுத்துகொண்டதால் அவர் ரெயிலில் சிக்காமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அப்போது அவரை மற்றொரு பெண் கட்டி அணைத்து ஆனந்த கண்ணீர் விட்டார்.
இதை அந்த பகுதியில் நின்றவர்கள் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததாக பெங்களூரு ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.
அந்த பெண் தண்டவாளத்தை கடந்து சென்று கொண்டிருக்கும்போது, ரெயில் வருவதை பார்த்ததும், கீழே படுத்திருக்கலாம். எனவே, இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.