சமூக வலைதளங்களில் வைரலாகும் ரூ.2 ஆயிரம் நோட்டு வடிவ திருமண அழைப்பிதழ்
- தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அரசு திரும்ப பெறும் நிலையில் தனது திருமண அழைப்பிதழை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
- காந்தி புகைப்படம் இடம்பெற்று இருக்கும் இடத்தில் விநாயகர், புதுமண தம்பதியை ஆசீர்வதிப்பது போன்றும் அச்சிட்டு இருந்தன.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கலசா தாலுகாவைச் சேர்ந்தவர் தேஜூ. கடந்த 2019-ம் ஆண்டு இவருக்கு திருமணம் ஆனது.
அப்போது அவர் திருமண அழைப்பிதழை 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வடிவில் வெளியிட்டிருந்தார். தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அரசு திரும்ப பெறும் நிலையில் தனது திருமண அழைப்பிதழை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி உள்ளது. அந்த பத்திரிகை முழுக்க, முழுக்க 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வடிவில் உள்ளது.
ரூபாய் நோட்டில் அதன் முகமதிப்பு அச்சிடப்பட்டு இருப்பது போலவே திருமணம் நடைபெற்ற ஆண்டு, ரூபாய் நோட்டுக்கான எண் வடிவில் திருமண தேதி, ரிசர்வ் வங்கியின் பெயர் அச்சிடப்பட்டு இருக்கும் இடத்தில் 'லவ் பேங் ஆப் லைப்' என்றும், ரூபாய் நோட்டில் இடம்பெற்று இருக்கும் பிற அம்சங்களைப் போல் திருமண தகவல்களை அச்சிட்டு இருந்தனர்.
மேலும் காந்தி புகைப்படம் இடம்பெற்று இருக்கும் இடத்தில் விநாயகர், புதுமண தம்பதியை ஆசீர்வதிப்பது போன்றும் அச்சிட்டு இருந்தன. மேலும் அதில் ஒரு கியூ-ஆர் கோடையும் அச்சிட்டு இருந்தனர். அதை ஸ்கேன் செய்தால் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து திருமணம் நடைபெறும் மண்டபத்திற்கு செல்வதற்கான வழியை கூகுள் மேப் காட்டிவிடும்.
தேஜு இந்த அழைப்பிதழை உடுப்பியில் உள்ள தனது நண்பர் மூலமாக டிசைன் செய்து அச்சிட்டு இருக்கிறார். தற்போது அதை பலரும் பார்த்து ரசிப்பது டிரண்ட் ஆகி உள்ளது.