நாங்கள் கொடுத்த அழுத்தம்தான் காரணம் - சிலிண்டர் விலை குறைப்பு குறித்து தேஜஸ்வி யாதவ்
- சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.200 குறைக்க மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
- ரக்ஷாபந்தனை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள பெண்களுக்காக இந்த பரிசு என தெரிவிக்கப்பட்டது.
மும்பை:
மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அதன்பின் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. ரக்ஷாபந்தனை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள பெண்களுக்காக இந்த பரிசு என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இந்தியா கூட்டணியின் 3வது ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பீகார் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ், தனது தந்தை லாலு பிரசாத் யாதவுடன் இன்று மும்பை வந்துள்ளார்.
இந்நிலையில், நாங்கள் தந்த அழுத்தம் காரணமாகவே சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்துள்ளனர் என பீகார் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தியா கூட்டணியின் 2வது கூட்டம் நடைபெற்றதன் காரணமாக ஏற்பட்ட அழுத்தத்தால் மத்திய அரசு சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்துள்ளது. 3வது கூட்டத்தில் எல்லாம் முடிவானதும் எங்கள் கூட்டணியின் பலம் முழுவதும் தெரிய வரும் என தெரிவித்தார்.