நன்றி இந்தியா: எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரான்ஸ் அதிபர் மேக்ரான்
- தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடி ஏற்றினார்.
- குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்து கொண்டார்.
நாட்டின் 75ஆவது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தந்த மாநிலங்களில் ஆளுநர்கள் தேசிய கொடியேற்றிய நிலையில் தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடி ஏற்றினார். குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்து கொண்டார். அவரை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தன்னுடன் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அழைத்து வந்தார். சாரட் வண்டியின் முன்னும் பின்பும் குதிரையில் வீரர்கள் அணிவகுத்து வந்தனர்.
குடியரசு தலைவர் திரவுபதி முர்முவையும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானையும் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைத் தளபதிகள் ஆகியோர் வரவேற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி சிவப்பு மற்றும் மஞ்சள் நிற தலைப்பாகை அணிந்து, பார்வையாளர் அரங்கில் இமானுவேல் மேக்ரானை வரவேற்றார். அதனைத்தொடர்ந்து, முப்படைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் அணிவகுப்பை குடியரசு தலைவர் தொடங்கி வைத்தார். பிரான்ஸ் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு அனைவரையும் கவர்ந்தது.
அதனைத்தொடர்ந்து, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த பிரான்ஸ் அதிபர், "இந்நிகழ்வு பிரான்ஸ்-க்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். நன்றி இந்தியா" எனக் குறிப்பிட்டிருந்தார்.