பாய்ந்து வந்த புல்லட்.. பதறி நின்ற நபரின் உயிரைக் காத்த மொபைல் போன்
- டெல்லியில் உள்ள பஞ்சாபி பாக் பகுதியில் இரண்டு குடும்பங்களுக்கு இடையே பகை இருந்துள்ளது
- லில்லுவும் அவரது குடும்பத்தினரும் சாந்தியையும் அவரது மகன்களையும் அடித்து விரட்டியுள்ளனர்.
டெல்லியில் மொபைல் போனால் துப்பாக்கிச்சூட்டில் இருந்து ஒருவர் உயிர்பிழைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. டெல்லியில் உள்ள பஞ்சாபி பாக் பகுதியில் இரண்டு குடும்பங்களுக்கு இடையே உள்ள பகையால் கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
அன்றைய தினம் சாந்தி என்ற பெண் தனது மகன்கள் அர்ஜுன், கமல் மற்றும் உறவினர்களுடன் தங்களுக்கு பகையாய் உள்ள லில்லு என்ற சாத்நாம் வீட்டுக்கு சமாதானம் பேச சென்றுள்ளார். ஆனால் லில்லுவும் அவரது குடும்பத்தினரும் சாந்தியையும் அவரது மகன்களையும் அடித்து விரட்டியுள்ளனர்.
இந்த சம்பவத்தின்போது சாந்தியின் மகன் அர்ஜூன் தான் எடுத்துவந்த துப்பாக்கியால் சுட்டதில் லில்லுவின் பக்கம் இருந்த ரித்விக் என்பவரை நோக்கி குண்டு பாய்ந்தது. ஆனால் ரித்விக் அவரது டவுசரில் வைத்திருந்த மொபைல் போன் மீது துப்பாக்கிக்குண்டு பட்டுத் தெறித்தது.
இதனால் போன் சுக்குநூறான நிலையில் குண்டு ரிதிவிக் உடலை துளைக்காததால் அவர் உயிர்தப்பினார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறது.