'ராகுல் காந்தியை சந்தித்த குற்றம்..' ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பிய ரெயில்வே.. பாஜகவை சாடிய வினேஷ் போகத்
- இந்திய ரெயில்வேவில் வடக்கு ரெயில்வே சிறப்பு அதிகாரியாகத் தான் வகித்து வந்த பதவியை ராஜினாமா செய்தார் வினேஷ் போகத்
- ''நாங்கள் ரோட்டில் இழுத்து செல்லப்பட்டபோது பாஜகவைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் எங்களுடன் நின்றன'
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், 50 கிலோவுக்கும் கூடுதலாக 100 கிராம் எடை அதிகரித்திருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்த போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
வெள்ளிப் பதக்கம் வழங்கக்கோரிய அவரின் மேல் முறையீடும் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து இந்தியா வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அரியானாவில் தனது கிராமத்தில் ஓய்விலிருந்த வினேஷ் போகத் அரியானா பஞ்சாப் இடையே அமைந்துள்ள ஷம்பு எல்லையில் பயிர்களுக்கு ஆதார விலை கோரி 200 நாட்களாக விவசாயிகள் நடத்தி வந்த போராட்டத்தில் கலந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.
அரியானா சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் வினேஷ் போகத் அரசியலுக்கு வரலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில் நேற்று முன் தினம் சக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுடன் ராகுல் காந்தியை சந்தித்தார். இந்நிலையில் இன்று இந்திய ரெயில்வேவில் வடக்கு ரெயில்வே சிறப்பு அதிகாரியாகத் தான் வகித்து வந்த பதவியை ராஜினாமா செய்த வினேஷ் போகத், பஜ்ரங் புனியாவுடன் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பொதுசெயலாளர் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் காங்கிரசில் இணைந்துள்ளார்.
தனது சொந்த காரணங்களுக்காக ரெயில்வே பதவியை விட்டு விலகுவதாக ராஜினாமா கடிதத்தில் வினேஷ் போகத் குறிப்பிட்டுள்ள நிலையில் அவரின் செயலுக்கு விளக்கம் கேட்டு ரெயில்வே ஷோ காஸ் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், வினேஷுக்கு வாட்ஸப்பில் ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது ஆச்சரியமளிக்கிறது. இதன் பின்னால் உள்ள காரணம் என்ன, வினேஷ் போகத்தும், பஜ்ரங் புனியாவும் ராகுல் காந்தியை சந்தித்ததை ஊடகங்கள் பெரிதாக காட்டியபிறகே இவ்வாறு நடந்துள்ளது. நாட்டின் எத்ரிர்க்கட்சித் தலைவரை சந்திப்பதும் குற்றமாகுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையே காங்கிரசில் சேர்ந்தது குறித்து பேசிய வினேஷ் போகத், நான் காங்கிரஸ் கட்சிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன், [கடந்த வருடம் போராட்டத்தின்போது] நாங்கள் ரோட்டில் இழுத்து செல்லப்பட்டபோது பாஜகவைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் எங்களுடன் நின்றன. பெண்களுக்காக முன்வந்து சண்டையிடும் ஒரு கட்சியில் சேர்வதை பெருமையாக நினைக்கிறன் என்று தெரிவித்துளார். கடந்த வருடம் பாஜக முன்னாள் எம்.பி பிரிஜ் பூஷன் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றத்க்காட்டை விசாரிக்கக்கோரி 6 மதஹக்லாமாக நடந்த போயிராட்டத்தில் வினேஷ் போகத் முன்னிலை வகித்தது குறிப்பிடத்தக்கது.