முன்னாள் எம்.பி மஹுவா மொய்த்ரா மீது பணமோசடி வழக்கு பதிந்தது அமலாக்கத்துறை
- திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மக்களவை எம்.பி.யாக இருந்தவர் மஹுவா மொய்த்ரா
- கடந்த டிசம்பர் மாதம் மஹுவா மொய்த்ரா எம்.பி. பதவி பறிக்கப்பட்டது
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மக்களவை எம்.பி.யாக இருந்தவர் மஹுவா மொய்த்ரா. இவர் அதானி குழுமத்திற்கு எதிராக கேள்விகளை கேட்க தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் இருந்து பணம் மற்றும் பரிசு பொருட்கள் பெற்றதாக பாஜக எம்பி நிஷிகாந்த் தூபே புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் பாராளுமன்ற மக்களவை நன்னடத்தை குழு விசாரணை நடத்தி பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் மஹுவா மொய்த்ரா எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.
மேலும், இந்த புகார் தொடர்பாக சிபிஐ-யும் வழக்குப்பதிவு செய்து அவரது இல்லத்தில் சோதனை நடத்தியது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஆஜராகுமாறு மஹுவா மொய்த்ராவுக்கு சிபிஐ சார்பில் சம்மனும் அனுப்பப்பட்டது.
ஆனால், மஹுவா மொய்த்ரா நான் தவறாக ஏதும் செய்யவில்லை என தொடர்ந்து கூறி, அந்த சம்மனை நிராகரித்தார்.
இந்நிலையில், மஹுவா மொய்த்ரா மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில், கிருஷ்ணா நகர் தொகுதியில் மஹுவா மொய்த்ரா மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இச்சூழலில் தேர்தல் வெற்றியே, தனது எம்பி-பதவியை பறித்த பாஜகவின் சதி மற்றும் சிபிஐ சோதனை, சம்மன்களுக்கு தகுந்த பதிலடியாக இருக்கும் என மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.