பாலியல் குற்றவாளி சாமியாருக்கு 6 முறை பரோல் வழங்க உதவிய 'ஜெயிலர்' அரியானா பாஜக எம்எல்ஏவாக தேர்வு!
- இதுவரை மொத்தம் 259 நாட்கள் ராம் ரஹீம் சுதந்திரமாக வெளியே இருந்துள்ளார்.
- தேர்தல் அறிவிக்கப்படுவதற்குச் சற்று முன்னர் தனது ஜெயிலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார்.
அரியானாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 46 இடங்களில் வெற்றி பற்று பாஜக 3 வது முறையாக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த தேர்தல் சமயத்தில் பாலியல் குற்றவாளி சாமியார் குர்மீத் ராம் ரஹீம் பரோலில் வெளி வந்தது அரசியல் ரீதியான சந்தேகங்களை ஏற்படுத்தி இருந்தது.
தேரா சாச்சா ஆசிரமத்தை நடத்தி வந்த மதகுரு ராம் ரஹீம் பெண் துறவிகள் 2 பேரை பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார் . கடந்த ஆகஸ்ட் 13 அன்று 21 நாள் பரோலில் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களைக் காரணம் காட்டி வெளியே வந்த ராம் ரஹீமுக்கு சரியாக அரியானா தேர்தலை ஒட்டி மீண்டும் 20 நாள் பரோல் நீட்டிப்பும் வழங்கப்பட்டது.
கடந்த 4 ஆண்டுகளில் 15வது முறையாக தற்போது பரோல் வழங்கப்பட்டது. 4 ஆண்டு சிறை வாசத்தில் இதுவரை மொத்தம் 259 நாட்கள் அவர் சுதந்திரமாக வெளியே இருந்துள்ளார். அரியானாவில் அதிக சீடர்களையும், பக்தர்களையும் கொண்டுள்ள ராம் ரஹீம் தேர்தல் காலங்களில் மட்டுமே இதுவரை அதிகம் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ராம் ரஹீம் இருக்கும் ரோஹ்தக் சிறையில் ஜெயிலராக இருந்த சுனில் சங்வான் தற்போது நடந்து முடிந்த அரியானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் சார்கி தாத்ரி [Charkhi Dadri] தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளரை 1,957 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.
தேர்தல் அறிவிக்கப்படுவதற்குச் சற்று முன்னர் தனது ஜெயிலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இவர் பாஜகவில் இணைந்தார். இவர் ரோஹ்தக் சிறையில் ஜெயிலராக இருந்த சமயத்திலேயே குர்மீத் ராம் ரஹீமுக்கு அதிகபட்சமாக 6 முறை பாரோல் வழங்கப்பட்டுள்ளது.
சிறையில் இருப்பவர்களுக்கு நீதிமன்றம் பரோல் வழங்கும் என்றாலும் கைதி நடத்தை உள்ளிட்டவை குறித்து ஜெயிலரிடம் அறிக்கை வாங்கிய அவரின் பரிந்துரைக்கு பின்னரே பரோல் வழங்கும். பரோல் வழங்கலாமா வேண்டாமா என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் ஜெயிலருக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.