மோசடி வழக்கை கோர்ட்டில் சந்திப்பேன்- ஜாமீனில் வெளியான கேரள காங்கிரஸ் தலைவர் உறுதி
- சுதாகரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து கேரளாவில் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசை போன்றே பினராயி அரசும் பாசிச அணுகுமுறையை கொண்டுள்ளது
திருவனந்தபுரம்:
கேரளாவில் பழங்கால பொருட்களை விற்பனை செய்து வந்தவர் மோன்சன் மாவுங்கால். இவர் தங்கம் கடத்தல் மற்றும் பழமையான பொருட்கள் விற்பனையில் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் அவர் மீது பாலியல் வழக்கும் இருந்தது. இந்த வழக்கில் மோன்சன் மாவுங்காலுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் மோன்சன் மாவுங்காலுடன் தொடர்பு வைத்திருந்ததாக கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க அவர், கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றார்.
இந்நிலையில் நேற்று கொச்சியில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு விசாரணைக்கு வந்த சுதாகரன் கைது செய்யப்பட்டார். அவரிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்திய போலீசார், பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்தனர்.
அதன்பிறகு நிருபர்களிடம் பேசிய கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன், நான் நீதித்துறை மீது நம்பிக்கை வைத்துள்ளேன். எனக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை. கோர்ட்டில் வழக்கை சந்திப்பேன். நான் பயப்படவோ ஒளிந்து கொள்ளவோ போவதில்லை என்றார்.
இந்நிலையில் சுதாகரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து கேரளாவில் 2 நாட்கள் கருப்பு தினம் கடைபிடிப்பதாகவும் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அரசியல் கட்சிகளுக்கு எதிராக கேரள அரசு பழிவாங்கும் நடவடிக்கையாக கூறி பிரசாரத்தை தீவிரப்படுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசை போன்றே பினராயி அரசும் பாசிச அணுகுமுறையை கொண்டுள்ளது என்று குற்றம் சாட்டப்படுகிறது.