இந்தியா

'ராமர் கோவில் கட்டிய பாஜகவிற்கு துரோகம் செய்த அயோத்தி மக்கள்'- ஆதங்கப்பட்ட 'லக்ஷ்மணன்'

Published On 2024-06-06 14:03 GMT   |   Update On 2024-06-06 14:03 GMT
  • ராமர் கோவில் அமைந்துள்ள ஃபைசாபாத்தில் சமாஜ்வாதியிடம் பாஜக தோல்வி அடைந்தது.
  • அயோத்தியின் மக்கள் தங்கள் மன்னனுக்கு எப்போதும் துரோகம் செய்பவர்கள் என்பதற்கு வரலாறே ஆதாரம்.

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. 293 இடங்களில் வென்று பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. இந்தியா கூட்டணி கட்சிகள் 232 இடங்களில் வென்றுள்ளது.

பாஜக தனிப் பெரும்பான்மையை இழந்துள்ளதால் கூட்டணி காட்சிகளை நம்பியே மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. இது பாஜகவிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையைப் பெறத் தவறியதால் ஏமாற்றம் அடைந்ததாகக் 'ராமாயணம்' டிவி தொடரில் லக்ஷ்மணனாக நடித்த சுனில் லஹேரி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

ராமர் கோவில் அமைந்துள்ள ஃபைசாபாத்தில் சமாஜ்வாதியிடம் பாஜக தோல்வி அடைந்ததையடுத்து, ராமாணந்தின் 'ராமாயணம்' டிவி தொடரில் லஷ்மணனாக நடித்த சுனில் லஹேரி ஆதங்கத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

"தேர்தல் முடிவுகளைப் பார்த்து நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன், முதலில், வாக்குப்பதிவு மிகவும் குறைவாக இருந்தது, பின்னர் இப்படிப்பட்ட ஒரு முடிவு. நான் தொடர்ந்து மக்களை வாக்களிக்க வற்புறுத்தினேன், ஆனால் யாரும் அதனை பொருட்படுத்தவில்லை. இப்போது கூட்டணி ஆட்சி அமையவுள்ளது. ஆனால் இந்த கூட்டணி அரசால் 5 வருடங்கள் சிரமமின்றி இயங்க முடியுமா?

வனவாசம் சென்று வந்த சீதையை சந்தேகப்பட்ட அயோத்தியை சேர்ந்த அதே மக்கள்தான் இவர்கள் என்பதை மறந்துவிட்டோம். கடவுளையே மறுப்பவர்களை நீங்கள் என்னவென்று அழைப்பீர்கள்? சுயநலவாதிகள். அயோத்தியின் மக்கள் தங்கள் மன்னனுக்கு எப்போதும் துரோகம் செய்பவர்கள் என்பதற்கு வரலாறே ஆதாரம்.

ராமரைக் கூடாரத்திலிருந்து வெளியே எடுத்து வந்து பிரமாண்ட கோவிலில் கட்டியர்களுக்கு எப்படி உங்களால் துரோகம் செய்ய முடிந்தது. இந்தியா உங்களை ஒருபோதும் மன்னிக்காது.

கங்கனா ரனாவத், மண்டி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார், இரண்டாவதாக, மீரட்டில் எனது மூத்த சகோதரர் அருண் கோவில் வெற்றி பெற்றுள்ளார். இருவரையும் நான் வாழ்த்துகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

ராமாயண தொடரில் லஹேரியுடன் இணைந்து ராமராக நடித்த அருண் கோவில் பாஜக சார்பில் மீரட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் ராமர் படத்துடன் மீரட்டில் பிரச்சாரம் செய்த புகைப்படங்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News