ஓடும் பைக்கில் டைட்டானிக் 'போஸ்' கொடுத்து சாகசம் செய்த வாலிபர்
- தினமும் வலைதளங்களில் இளைஞர்களின் சாகச வீடியோக்கள் அதிகரித்து கொண்டே வருகிறது.
- மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் லைக்குகளை குவிக்க ஆசைப்பட்டு இளைஞர்கள் செய்யும் சாகசங்கள் சில நேரங்களில் விபரீதத்தில் முடிந்து விடுகிறது. குறிப்பாக இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்து வீடியோக்களை வெளியிட வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர். ஆனாலும் தினமும் வலைதளங்களில் இளைஞர்களின் சாகச வீடியோக்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் கான்பூர் நகரின் நவாங்கஞ்ச் பகுதியில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சாகச பயணம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
அதில், நவீன மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்லும் வாலிபர் திடீரென அந்த மோட்டார் சைக்கிள் மீது நின்று பயணம் செய்கிறார். அப்போது டைட்டானிக் படத்தில் கதாநாயகன் கப்பலில் நிற்பதை போன்று 'போஸ்' கொடுத்தவாறு மோட்டார் சைக்கிளில் சாகச பயணம் செய்த காட்சிகள் பயனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து உன்னாவ் போலீசார் அந்த வாலிபர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.