சிறுவனையும், அவனது பாட்டியையும் கொடூரமாக தாக்கும் ரெயில்வே போலீசார்- வீடியோ
- சீருடை அணியாத மற்றொரு ஆண், அந்த பெண்ணின் தலைமுடியை இழுத்து, தலையை பக்கவாட்டில் ஆட்டுவதைக் காணலாம்.
- சம்பவம் மத்திய பிரதேசம் தலித்துகளுக்கு பாதுகாப்பற்ற நிலைமை குறித்து காட்டுவதாக முன்னாள் முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
போபால்:
மத்தியப் பிரதேச மாநிலம் கட்னியில் உள்ள ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் பெண் மற்றும் அவரது பாட்டியை சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு ரெயில்வே காவல்துறையைச் (GRP) சேர்ந்தவர்கள் பாட்டி மற்றும் அவரது பேரன் (15 வயது) ஆகியோரை திருட்டு வழக்கு குறித்து விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் அந்த பெண்ணை தாக்கியவர்கள், பின்னர் அவரது பேரனை நோக்கி தாக்க திரும்பியதாக கூறப்படுகிறது.
''அப்பா எங்கே என்று போலீஸ் கேட்டது... எங்கே என்று தெரியவில்லை. போலீசார் என்னை டிராபிக் இன்ஸ்பெக்டர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது என்னை அடித்தார்கள். அப்போது என் பாட்டியையும் அடித்தார்கள். என் அப்பா கூலித் தொழிலாளிதான்" என்று சிறுவன் கூறினான்.
வீடியோவில், GRP போலீசார் அவரை பெல்ட்டால் அடிக்கும்போது அந்த அப்பெண் தரையில் கிடப்பதை காண முடிகிறது. சீருடை அணியாத மற்றொரு ஆண், அந்த பெண்ணின் தலைமுடியை இழுத்து, தலையை பக்கவாட்டில் ஆட்டுவதைக் காணலாம்.
வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, இந்த வீடியோ குறித்து ஏஎஸ்பி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்று கட்னி எஸ்பி அபிஜீத் குமார் ரஞ்சன் தெரிவித்தார். மேலும், இது திருடப்பட்ட நகைகளை மீட்பது தொடர்பான பழைய சம்பவம் இது என தெரிவித்த போலீசார், வீடியோவில் காணப்படும் GRP ஆட்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.
இதனிடையே, இந்த சம்பவம் மத்திய பிரதேசம் தலித்துகளுக்கு பாதுகாப்பற்ற நிலைமை குறித்து காட்டுவதாக முன்னாள் முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.