இந்தியா

காங்கிரஸ், சமாஜ்வாடி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை புல்டோசரால் இடித்துவிடுவார்கள்: பிரதமர் மோடி

Published On 2024-05-17 07:54 GMT   |   Update On 2024-05-17 07:54 GMT
  • காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலை இடித்து விடுவார்கள்.
  • ராமர் மீண்டும் கூடாரத்துக்குச் செல்ல நேரிடுவார் என் பிரதமர் மோடி தெரிவித்தார்.

லக்னோ:

உத்தர பிரதேச மாநிலம் பாரபங்கியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

அயோத்தி தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மாற்ற விரும்புவதாக காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். இது எப்படி சாத்தியம் என்று சிலர் நினைக்கலாம்.

சுதந்திரப் போராட்டத்தின் போது நாட்டைப் பிரிக்கவேண்டும் என்று பேசும்போது, நாட்டைப் பிரிக்கமுடியாது என்று மக்கள் சொன்னார்கள். ஆனாலும் அது நடந்தது. அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். அவர்களின் சாதனை பதிவு அத்தகையது. அவர்களுக்கு நாடு முக்கியமில்லை. குடும்பம், அதிகாரம்தான் முக்கியம்.

காங்கிரசும், சமாஜ்வாடியும் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை புல்டோசர் மூலம் இடித்துவிடுவார்கள். காங்கிரஸ் வெற்றி பெற்றால் குழந்தை ராமர் கோவிலில் இருந்து மீண்டும் கூடாரத்திற்கே செல்வார். புல்டோசரை எங்கு பயன்படுத்த வேண்டும், எங்கு பயன் படுத்தக்கூடாது என்று யோகி ஆதித்யநாத்திடம் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

தேர்தலில் வெற்றி பெற்று மோடி அரசு ஹாட்ரிக் சாதனை படைக்கும். தேர்தல் நடந்து கொண்டிருக்கும் வேளையில் இந்தியா கூட்டணி கட்சிகள் சீட்டுக்கட்டு போல சரியத் தொடங்கி உள்ளன.

பா.ஜக-தேசிய ஜனநாயக கூட்டணி தேசிய நலனுக்காக அர்ப்பணித்து உழைக்கிறது. ஆனால் இந்தியா கூட்டணி நாட்டில் உறுதியற்ற தன்மையை உருவாக்க களத்தில் உள்ளது.

புதிய அரசில் ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளுக்காக பல முக்கிய முடிவுகளை நான் எடுக்க உள்ளேன். ரேபரேலி மக்கள் பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள் என காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார்.

இதைக்கேட்ட சமாஜ்வாதி இளவரசரின் (அகிலேஷ் யாதவ்) இதயம் உடைந்தது. கண்ணீர் மட்டும்தான் வரவில்லை. ஆனால் அவரது இதயத்தின் ஆசைகள் அனைத்தும் உடைந்துவிட்டன. அகிலேஷ் யாதவ் புதிய அத்தையின் (மம்தா பானர்ஜி) கீழ் அடைக்கலம் அடைந்துள்ளார்.

இந்த புதிய அத்தை மேற்கு வங்காளத்தில் இருக்கிறார். அவர் (மம்தா பானர்ஜி) இந்தியா கூட்டணிக்கு வெளியில் இருந்துதான் ஆதரவு தருவேன் என கூறியுள்ளார்.

உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' திட்டத்தின் காரணமாக தற்போது நான் வெளிநாடுகளுக்குச் செல்லும் பரிசுகளைத் தேர்ந்தெடுக்க எனது மூளையை அதிகம் பயன்படுத்த வேண்டியதில்லை. மாநில இணையதளத்தைப் பார்த்து பரிசு பொருட்களை எடுத்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

Tags:    

Similar News