இந்தியா

சுரங்கம் தோண்டப்பட்ட பகுதி

கான்பூரில் துணிகரம்: 10 அடி நீளத்திற்கு சுரங்கம் தோண்டி வங்கியில் தங்க நகைகளை கொள்ளையடித்த கும்பல்

Published On 2022-12-23 16:44 GMT   |   Update On 2022-12-23 16:44 GMT
  • வங்கியில் வாடிக்கையாளர்கள் 29 பேர் அடகு வைத்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
  • வங்கியில் வேலை செய்யும் யாரோ ஒருவரின் உதவியால் கொள்ளை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கான்பூர்:

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஸ்டேட் வங்கியில் புகுந்த கொள்ளையர்கள் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஸ்டேட் வங்கியின் அருகில் காலியாக கிடந்த இடத்தில் இருந்து சுமார் 10 அடி நீளத்திற்கு சுரங்கம் தோண்டிய கொள்ளையர்கள், அந்த சுரங்கம் வழியாக வங்கியில் நகை, பணம் வைத்திருக்கும் பாதுகாப்பு அறைக்கு சென்றுள்ளனர். அங்கிருந்த 1.8 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர். அவற்றின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் ஆகும். நகை பெட்டகத்தின் அருகில் உள்ள பணப்பெட்டியை உடைக்க முடியாததால் அதில் இருந்த 32 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் தப்பியது. வங்கியில் வாடிக்கையாளர்கள் 29 பேர் அடகு வைத்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக வங்கி மேலாளர் தெரிவித்தார்.

இந்த கொள்ளை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தடயவியல் நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

வங்கியில் வேலை செய்யும் யாரோ ஒருவரின் உதவியால் இந்த கொள்ளை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும், அந்த பகுதியை நன்றாக நோட்டமிட்டு, வங்கியின் கட்டுமானம் குறிப்பாக பாதுகாப்பு பெட்டக அறை இருக்கும் பகுதி குறித்து நன்கு தெரிந்தே கொள்ளையடித்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News