இந்தியா (National)

ஹத்ராஸ் நெரிசலுக்கு முக்கிய காரணம் இதுதான்.. சிறப்புக் குழு அறிக்கை - உச்சநீதிமன்றம் சென்றது வழக்கு

Published On 2024-07-09 07:59 GMT   |   Update On 2024-07-09 07:59 GMT
  • இந்த விபத்து குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சிறப்பு நிபுணர் குழு தங்களது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
  • ஜூலை 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கடந்த வாரம் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.

 

நிகழ்ச்சியில் 88,000 பேர் கலந்துகொள்ள மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 2.5 லட்சம் பேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்து தொடர்பாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இதுவரை 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எப்.ஐ.ஆரில் போலே பாபாவின் பெயர் சேர்க்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த விபத்து குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சிறப்பு நிபுணர் குழு தங்களது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

அந்த அறிக்கையில், அனுமதிக்கபட்டத்தை விட அதிகம் பேர் கலந்துகொண்டதே இந்த கூட்டநெரிசலுக்கு முக்கிய காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நிகழ்ச்சி முடியும் தருவாயில் போலே பாபா ஏறிச் சென்ற காரில் இருந்து கிளம்பிய புழுதியை எடுப்பதற்காக மக்கள் நெறுக்கிப்பிடித்துள்ளனர்.

அவ்வாறு முன்னேறியவர்களை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பிடித்துத் தள்ளியுள்ளனர். இதனால் பலர் நிலை தடுமாறி விழுந்துள்ளனர். விழுந்தவர்கள் மீது மற்றவர்கள் ஏறி ஓடியதால் இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதற்கிடையில், ஹத்ராஸ் கூட்டநெரிசலை நேரில் பார்த்த சுதிர் பிரதாப் சிங் என்பவர், " தனது காலடி மண்ணை எல்லோரும் எடுத்துக் கொள்ளுமாறு போலே பாபா அழைத்தார். அதன்பின் கூட்டத்தில் அனைவரும் அந்த மண்ணை எடுக்க முண்டியடித்துச் செல்ல, ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இதுவே பலரின் உயிரிழப்புக்குக் காரணம். கூட்ட நெரிசல் ஏற்பட்ட உடன் போலே பாபா அங்கிருந்து சென்று விட்டார். உள்ளூர் மக்கள் தான் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றினர்" என்று அவர் வாக்குமூலம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் ஹத்ராஸ் விபத்து குறித்து விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனு, வரும் ஜூலை 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

 

Tags:    

Similar News