இந்தியா

விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட வினேஷ் போகத்.. அரசியல் வருகை குறித்து கூறியது இதுதான்!

Published On 2024-08-31 12:04 GMT   |   Update On 2024-08-31 12:04 GMT
  • போராட்டத்தைத் தொடங்கி இன்றுடன் 200 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி இன்று அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் வினேஷ் போகத் கலந்து கொண்டார்.
  • இப்போது எனது நாடு துன்பத்தில் உள்ளது, விவசாயிகளுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க அரசு முன்வர வேண்டும்.

பாரீஸ் ஒலிம்பிக்சில் மல்யுத்த போட்டியின் இறுதிச் சுற்று வரை முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் இந்தியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் வெள்ளிப் பதக்கத்துக்கான அவரது மேல் முறையீடும் பலனளிக்காமல் போனது.

இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்தப் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து தாயகம் திரும்பிய அவருக்கு, டெல்லியிலும் அரியானாவில் அவரது சொந்த கிராமத்திலும் உற்சாக வரவேற்பானது அளிக்கப்பட்டது. தொடர்ந்து அரியானா சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளதையொட்டி வினேஷ் போகத் அரசியலிலும் ஈடுபட அதிக வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பஞ்சாப் - அரியானாவின் ஷம்பு எல்லையில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் கோரி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் வினேஷ் போகத் பங்கேற்றுள்ளார். விவசாயிகள் தங்களது போராட்டத்தைத் தொடங்கி இன்றுடன் 200 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி இன்று அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் வினேஷ் போகத் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு விவசாயிகள் சார்பாக வாள் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய வினேஷ் போகத், உங்களின் மகள் இன்று உங்களோடு நிற்கிறாள் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அரசியலுக்கு வருவீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நான் ஒரு மல்யுத்த வீராங்கனை, மொத்த நாட்டுக்கு நான் சொந்தம், மாநிலத்தில் வர உள்ள தேர்தலில் நான் செய்ய எதுவும் இல்லை. எனக்கு இப்போது தெரிந்தது எல்லாம், இப்போது எனது நாடு துன்பத்தில் உள்ளது, விவசாயிகளுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க அரசு முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக பாஜக முன்னாள் எம்.பி பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடத்த போராட்டத்தில் வினேஷ் போகத் முன்னிலை வகித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News