வங்கியில் துப்பாக்கியை காட்டி தற்கொலை மிரட்டல்.. ரூ. 40 லட்சத்துடன் எஸ்கேப் ஆன நபர்
- அவர் என்னை கொன்று விடுவதாகவும் மிரட்டினார்.
- இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுவிட்டான்.
உத்தர பிரதேச மாநிலத்தின் முசாபர்நகரில் உள்ள தனியார் வங்கியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியை காட்டி ரூ. 40 லட்சம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சம்பவம் குறித்து கொள்ளையடிக்கப்பட்ட தனியார் வங்கி மேலாளர் காவல் அதிகாரிகளிடம் கூறும் போது, "முகமூடி அணிந்த மர்ம நபர் எனது அறைக்கு வந்து துப்பாக்கியை என் கழுத்தில் வைத்து, ரூ. 40 லட்சத்தை கொடுக்குமாறு மிரட்டல் விடுத்தார். பணத்தை கொடுக்காத பட்சத்தில் அவர் என்னை கொன்று விடுவதாகவும் மிரட்டினார்."
"நான் காசாளர் ரோகித்-ஐ அழைத்து ரூ. 40 லட்சத்தை கொண்டுவரச் சொன்னேன். பணத்தை பெற்றுக் கொண்ட மர்ம நபர் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி, இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுவிட்டான்," என கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை பெற்று இருப்பதாகவும், அதில் உள்ள வீடியோக்களை கொண்டு குற்றவாளியை விரிவில் பிடிப்போம் என்று காவல் துறை துணை கண்காணிப்பாளர் கௌதம் ராம்சேவாக் தெரிவித்தார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பட்டப் பகலில் வங்கியில் நடைபெற்ற கொள்ளை சம்பம் குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் அவர் தனது பதிவில் இணைத்துள்ளார்.
அதில், "உ.பி. குற்ற செய்தி: வங்கி பாதுகாவலரின் துப்பாக்கி கொள்ளையரின் துப்பாக்கியை கண்டு அஞ்சியது. ரூ. 40 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வீடியோவும் உண்மை, பாஜக ஆளும் உ.பி.-யில் சட்டம் ஒழுங்கு நிலைமையின் உண்மையும் இதுதான்," என்று குறிப்பிட்டுள்ளார்.