திருப்பதி மலைப்பாதையில் காரில் அடாவடி சாகசம்- 6 வாலிபர்கள் கைது
- திருப்பதி மலை சாலையில் வாகனத்தில் சென்றவர்கள் இவர்களின் அட்டகாசத்தால் அச்சம் அடைந்தனர்.
- சில பக்தர்கள் இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் சுசில், விகாஸ், பிரபஞ்சன், ஆதர்ஷ், ரமேஷ், சுமன். இவர்கள் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக காரில் வந்தனர்.
திருப்பதி மலைப்பாதையில் காரில் சென்ற போது வாலிபர்கள் காரின் கதவுகளை திறந்து விட்டபடியும் மேற்கூறையில் நின்றபடியும் காரை தாறுமாறாக ஓட்டி ஆபத்தான முறையில் சாகசம் செய்தனர். மேலும் செல்பி வீடியோ எடுத்தபடி கத்தி கூச்சலிட்டபடி ஆரவாரம் செய்தனர்.
திருப்பதி மலை சாலையில் வாகனத்தில் சென்றவர்கள் இவர்களின் அட்டகாசத்தால் அச்சம் அடைந்தனர். சில பக்தர்கள் வாலிபர்களின் அட்டகாசத்தை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
சில பக்தர்கள் இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் புகார் செய்தனர். அவர்கள் திருப்பதி மலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் வாலிபர்கள் காரில் சாகசம் செய்தபடி மற்ற வாகன ஓட்டுனர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் படி சென்றது தெரிய வந்தது.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து காரின் எண் மற்றும் வாலிபர்களின் அடையாளங்களை கண்டுபிடித்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து மலைப்பாதையில் சாகசத்தில் ஈடுபட்ட 6 வாலிபர்களை கைது செய்தனர். மேலும் வாலிபர்கள் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.