VIDEO: பொற்கோவில் வாசலில் அகாலிதள தலைவர் சுக்பீர் சிங் மீது துப்பாக்கிச்சூடு - பஞ்சாபில் பரபரப்பு
- அரசு செய்த குற்றங்களுக்காக சீக்கிய குருமார்கள் அடங்கிய அகால் தக்த் பீடம் தண்டனை வழங்கியது
- பொற்கோவில் வாசலில் சக்கர நாற்காலியில் அமர்ந்து கழுதில் தண்டனை தட்டை தொங்கவிட்டிருந்தார்
பஞ்சாபில் கடந்த 2007 முதல் 2017 வரை ஆட்சி செய்த சிரோமணி அகாலி தள அரசு செய்த குற்றங்களுக்காக சீக்கிய குருமார்கள் அடங்கிய அகால் தக்த் பீடம் அக்கட்சியினருக்கு மத முறைப்படி தன்கா [tankhah] தண்டனையை வழங்கியது.
2015 ஆம் ஆண்டு பஞ்சாப் துணை முதல்வராக இருந்தபோது சிரோமணி அகாலி தல முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுக்பீர் சிங் பாதல், சீக்கியர்களுக்கும் தேரா சச்சா அமைப்பின் ஆதரவாளர்களுக்கும் இடையே வன்முறை மோதல்களைத் தூண்டிய வழக்கில் ராம் ரஹீமுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக சுக்பீர் சிங் பாதல் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி அகால்தக்த் அவருக்கு இந்த தண்டனையை விதித்துள்ளது.
இதன்படி அம்ரிஸ்தரில் பொற்கோவிலில் சேவாதார் ஆக சேவை செய்ய முடிவானது. நேற்று முன் தினம் முதல் இந்த தண்டனையை ஏற்று சுக்பீர் சிங் பாதல் சேவத்தார் நீல நிற உடையுடன் பொற்கோவில் வாசலில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி கழுதில் தண்டனை தட்டை தொங்கவிட்டுக்கொண்டு கையில் ஈட்டியோடு கோவிலுக்கு காவல் இருந்து மத தண்டனையை நிறைவேற்ற தொடங்கினார்.
அவருடன் ஆதரவாளர்களும் உடன் இருந்தனர். அகாலிதளத்தின் மூத்த தலைவரும், பாதலின் மைத்துனருமான பிக்ரம் சிங் மஜிதியா, பொற்கோவிலில் பாத்திரங்களைக் கழுவித் தனது தண்டனையை நிறைவேற்றி வந்தார்.
இந்நிலையில் பொற்கோவில் வாசலில் அமர்ந்திருந்த சுக்பீர் சிங் பாதல் மீது இன்று [ புதன்கிழமை] காலை திடீர் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த சுக்பீர் சிங் அருகே நெருங்கிய நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அவரை நோக்கி சுட்டார். ஆனால் அருகில் இருந்த ஆதரவாளர் ஓடிச்சென்று அந்த நபரின் கையை தட்டி விட்டதால் சுக்பீர் சிங் உயிர்பிழைத்தார்.
சுற்றியிருந்த மக்கள் அந்த நபரை மடக்கிப்பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். துப்பாக்கிச்சூடு நடந்திய நபர் நரேன் சிங் சௌரா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் பபர் கால்ஸா இன்டர்நேஷனல் (BKI) என்ற பயங்கரவாத அமைப்போடு தொடர்புடையவர் என்று தெரியவந்துள்ளது.