இந்தியா

ரத்த சோகையை குணமாக்கும் தமிழ்நாட்டு சித்த மருந்து- ஆயுஷ் ஆராய்ச்சியில் தகவல்

Published On 2024-09-11 02:22 GMT   |   Update On 2024-09-11 02:22 GMT
  • ரத்த சோகையை குறைப்பதில் சித்த மருந்துகளை பிரதானமாக பயன்படுத்தும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
  • ஆய்வில் 2 ஆயிரத்து 648 சிறுமிகள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

புதுடெல்லி:

ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் (என்.ஐ.எஸ்.) மற்றும் நாட்டின் புகழ்பெற்ற சித்த மருத்துவ நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் குழு, தமிழ்நாடு சித்த மருந்து கலவையான அன்னபேதி செந்தூரம், பாவனக் கடுக்காய், மாதுளை மணப்பாகு, நெல்லிக்காய் லேகியம் ஆகியவற்றைக் கொண்ட 'ஏ.பி.என்.எம்.' மருந்து, ரத்த சோகை உள்ள வளரிளம் பருவத்துப் பெண்களுக்கு ஹீமோகுளோபின் மற்றும் அதனுடன் கூடிய சத்துக்களின் அளவை மேம்படுத்தும் என ஆராய்ச்சியில் கண்டறிந்து உள்ளனர். ரத்த சோகையை குறைப்பதில் சித்த மருந்துகளை பிரதானமாக பயன்படுத்தும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் 2 ஆயிரத்து 648 சிறுமிகள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஆய்வு முடிவுகளின் தாக்கம் மற்றும் முக்கியத்துவம் பற்றி தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ஆர். மீனாகுமாரி கூறுகையில், "ஆயுஷ் அமைச்சகத்தின் பொது சுகாதார முயற்சிகளில் சித்த மருத்துவம் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.

வளரிளம் பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, உணவு ஆலோசனை, நோய்த்தடுப்பு பராமரிப்பு மற்றும் சித்த மருந்துகள் மூலம் அளிக்கப்படும் சிகிச்சைகள் ரத்த சோகை நோயாளிகளுக்கு பலன்களை அளித்தன. எனவே ரத்த சோகைக்கான சித்த மருந்துகள் செலவு குறைந்த பங்கை பொது சுகாதாரத்துக்கு அளிக்கின்றன" என்றார்.

Tags:    

Similar News