குடும்பத்துடன் சுற்றுப்பயணம்: 2 நாட்களுக்கு முன்னதாகவே கேரளா திரும்பிய பினராயி விஜயன்
- குடும்பத்தினருடன் 3 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.
- பினராயி விஜயனின் வெளிநாட்டு பயணம் விமர்சனத்துக்குள்ளானது.
திருவனந்தபுரம்:
கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், விடுமுறைக்காக தனது குடும்பத்தினருடன் கடந்த 6-ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா, சிங்கம்பூர் ஆகிய 3 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.
பினராயி விஜயனுடன் அவரது மனைவி கமலா, பேரன், மகள் வீணா விஜயன், அவரது கணவரும் மாநில சுற்றுலாத்துறை மந்திரியுமான முகமது ரியாஸ் உள்ளிடடோரும் சென்றனர்.
மக்களவை தேர்தலுக்கு மத்தியில் பினராயி விஜயனின் இந்த வெளிநாட்டு பயணம் குறித்து காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் கேள்வி எழுப்பின.
மேலும் அவரது வெளிநாட்டு பயணத்துக்கு ஸ்பான்சர் செய்தது யார்? என்பதை தெரிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனால் பினராயி விஜயனின் வெளிநாட்டு பயணம் விமர்சனத்துக்குள்ளானது.
இந்நிலையில் பினராயி விஜயன் திட்டமிட்டிருந்தபடி இல்லாமல், 2 நாட்களுக்கு முன்னதாகவே வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு கேரளா திரும்பினார். பயண நாட்களை குறைத்துக்கொண்டு திரும்பியது குறித்து கேட்டதற்கு பினராயி விஜயன் பதிலளிக்கவில்லை.