வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து திருநங்கை போட்டி
- நான் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போட்டியிடவில்லை.
- இந்திய சமூகத்தில் திருநங்கைகளும் ஓர் அங்கம். ஆனால் எங்களுக்கு நாட்டில் ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை.
உத்தரபிரதேசத்தின் நிர்மோகி அகாடா என்ற சாதுக்கள் அமைப்பைச் சேர்ந்த திருநங்கை மகாமண்டலேஸ்வரர் ஹேமாங்கி சகி (46). துறவியான அவர் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்து மதத்தை பரப்பி வருகிறார்.
இந்த சூழலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து அகில பாரத மகா இந்து சபையின் வேட்பாளராக மகாமண்டலேஸ்வரர் ஹேமாங்கி சகி போட்டியிடுகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நான் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போட்டியிடவில்லை. திருநங்கைகளின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதற்காக அரசியலில் களமிறங்கி உள்ளேன். திருநங்கைகள் குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை. மத்திய அரசின் சார்பில் திருநங்கைகள் நலனுக்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதுகுறித்து மத்திய அரசு விளம்பரம் செய்வதில்லை.
இந்திய சமூகத்தில் திருநங்கைகளும் ஓர் அங்கம். ஆனால் எங்களுக்கு நாட்டில் ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை. எந்தவொரு அரசியல் கட்சியும் திருநங்கைகளை வேட்பாளர்களாக அறிவிப்பது இல்லை. அகில இந்து மகா சபை என்னை வேட்பாளராக அறிவித்து நாட்டுக்கு முன் உதாரணத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதை மற்ற கட்சிகளும் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு மகாமண்டலேஸ்வரர் ஹேமாங்கி சகி தெரிவித்தார்.