மூன்றில் இரண்டு பங்கு 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பின: ரிசர்வ் வங்கி கவர்னர் தகவல்
- செப்டம்பர் 30-ந் தேதி கடைசிநாள் என்பது கல்லில் எழுதப்பட்டது அல்ல.
- பொதுமக்கள் பீதியடைந்து வங்கிக்கு படையெடுக்க வேண்டாம்.
மும்பை :
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
அவற்றை அச்சிடும் பணி, 2018-2019 நிதி ஆண்டிலேயே நிறுத்தப்பட்டது. அதனால், கடந்த மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த நோட்டுகளில் 2,000 ரூபாய் நோட்டுகள், வெறும் 10.8 சதவீதமாக இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.3 லட்சத்து 62 ஆயிரம் கோடி ஆகும்.
இதற்கிடையே, 2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30-ந் தேதிக்குள் அந்த நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.
கடந்த 8-ந் தேதி நிருபர்களுக்கு பேட்டி அளித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், 50 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பி விட்டதாக கூறினார்.
இந்நிலையில், நேற்று ஒரு செய்தி நிறுவனத்துக்கு சக்திகாந்த தாஸ் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-
கடந்த வார மத்தியில் இருந்த நிலவரப்படி, ரூ.2 லட்சத்து 41 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பி விட்டன. இவை மொத்த 2,000 ரூபாய் நோட்டுகளில், மூன்றில் இரண்டு பங்கை விட அதிகம். இவற்றில் 85 சதவீத நோட்டுகள் டெபாசிட்டாகவும், மற்றவை வேறு நோட்டுகளாக மாற்றிய வகையிலும் வந்துள்ளன.
செப்டம்பர் 30-ந் தேதி கடைசிநாள் என்பது கல்லில் எழுதப்பட்டது அல்ல. எனவே, பொதுமக்கள் பீதியடைந்து வங்கிக்கு படையெடுக்க வேண்டாம்.
நோட்டு வாபஸ் நடவடிக்கையால், நிதி ஸ்திரத்தன்மைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. பொதுமக்களின் நுகர்வு அதிகரித்து, அவர்கள் அதிக செலவு செய்ய வேண்டி இருக்கும் என்று சில ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. ஆனால், பொருளாதாரம் மீது எதிர்மறை தாக்கம் எதுவும் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.