ஊழியர்களை மகிழ வைக்கும் ஊபர்: 1000 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கிறது
- இந்தியாவில் சேவையை தொடங்கி ஊபர் 10 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டது
- ஆரம்ப கல்வியிலிருந்து முதுநிலை வரை ஆகும் செலவை ஊபர் ஏற்கிறது
அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம், ஊபர் (Uber). உலகின் 70 நாடுகளில் 11 ஆயிரம் நகரங்களில் வாடகை கார் சேவையில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம், இச்சேவை தவிர உணவு வினியோகத்திலும், சரக்கு போக்குவரத்திலும் ஈடுபட்டுள்ளது.
இந்நிறுவனம், இந்தியாவில் வாடகை கார் சேவையை தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இதனையொட்டி, அந்நிறுவனம் தங்களின் கட்டமைப்புடன் இணைந்துள்ள டிரைவர்களின் குழந்தைகளில் 1000 பேருக்கு ஆரம்பகல்வியிலிருந்து முதுநிலை கல்வி வரை ஆகும் செலவை ஏற்று கொள்கிறது. இதில் பள்ளிக்கல்வி கட்டணம், உபகரணங்கள், இணைய சேவை உட்பட அக்குழந்தைகளின் கல்விக்கு தேவைப்படும் அனைத்து செலவினங்களும் இதில் அடங்கும்.
மேலும், தங்களுடன் நீண்டகாலமாக இணைந்துள்ள 100 டிரைவர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கு பாராட்டு விழாவையும் ஊபர் நடத்தியது.
இது குறித்து ஊபர் இந்தியா நிறுவன தலைவர் பிரப்ஜீத் சிங் (Prabhjeet Singh) தெரிவித்ததாவது:
மக்கள் சேவையில் டிரைவர்களின் பங்களிப்பு இல்லாமல் ஊபர் 10 ஆண்டுகாலம் நிலைத்து நின்றிருக்க முடியாது. எங்களின் சாதனைகளை நினைத்து பார்க்கும் இவ்வேளையில் எங்களுடன் இணைந்து மக்கள் சேவையாற்ற இணைந்திருப்பவர்களுக்கு நாங்கள் திருப்பி அளிக்க வேண்டிய பங்கை முறையாக வழங்க கடமைப்பட்டுள்ளோம். ஒவ்வொரு குழந்தைக்கும் கல்விக்கான வாய்ப்பு கட்டாயம் அளிக்கப்பட வேண்டும் என நாங்கள் நம்புகிறோம். இந்த சிறு முயற்சி மூலமாக அனைத்து குழந்தைகளுக்கும் சமமான வாய்ப்பு கிடைப்பதற்கு எங்களின் பங்களிப்பும் உறுதி செய்யும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊபரின் இச்செயல் சமூக வலைதளங்களில் பயனர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறது.