கண்ணியமற்ற நடத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது: மாநிலங்களவை தலைவர் வேதனை
- மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு கொள்ள உறுப்பினர்களுக்கு சுதந்திரம் உள்ளது.
- ஆனால் மற்ற கண்ணோட்டங்களை புறக்கணிப்பது பாராளுமன்ற செயல்பாடுகளின் ஒரு பகுதி அல்ல.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. பாஜக தனி மெஜாரிட்டி பெறாத நிலையில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. பிரதமர் மோடிக்கு மீண்டும் ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை மக்கள் வழங்கவில்லை. மக்களவை தேர்தலில் அவர் தார்மீக தோல்வியை அடைந்துள்ளார் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.
அத்துடன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடுமையான அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் மாநிலங்களவை தலைவரான ஜெக்தீப் தன்கர், கண்ணியமற்ற நடத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது என வேதனை அடைந்துள்ளார்.
இது தொடர்பாக ஜெக்தீப் தன்கர் கூறியதாவது:-
மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு கொள்ள உங்களுக்கு (மாநிலங்களவை உறுப்பினர்கள்) சுதந்திரம் உள்ளது. ஆனால் மற்ற கண்ணோட்டங்களை புறக்கணிப்பது பாராளுமன்ற செயல்பாடுகளின் ஒரு பகுதி அல்ல.
சில உறுப்பினர்கள் செய்தித்தாள்களில் இடம் பிடிக்க முயற்சி செய்கிறார்கள். அவையைவிட்டு வெளியேறிய உடனே மீடியா அறிக்கைகளை வெளியிடுகின்றனர். பிரபலம் அடைய சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றன.
உறுப்பினர்கள் அவர்களுடைய பேச்சுக்கு சற்று முன் அவைக்குள் வருகிறார்கள். பின்னர் உடனடியாக வெளியேறுகின்றனர். அவைக்குள் இருக்காமல் வந்தோம் சென்றோம் யுக்தியை கடைபிடிக்கிறார்கள்.
அரசியலமைப்பு மதிப்புகள் மற்றும் சுதந்திரங்களின் கோட்டையாக பாராளுமன்றம் உள்ளது. சில சமயங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டபோது, அவைத் தலைவர்கள் தங்களது சமயோஜித செயலால் அதை சிறப்பாக கையாண்டுள்ளனர்.
ஆனால் நிலைலை தற்போது மிகவும் மோசடைந்துள்ளது. கண்ணியமற்ற நடத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. இது ஜனநாயக ஆன்மாவுக்கான அடியாகும்.
இவ்வாறு ஜெக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.