தவறான தகவல்களை பரப்பும் 3 யூ-டியூப் சேனல்கள்- மத்திய அரசு எச்சரிக்கை
- மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து பொய் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன.
- 30 கோடிக்கும் அதிகமான முறை இந்த தவறானத் தகவல்களை சந்தாதாரர்கள் பார்த்துள்ளனர்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மைத் தன்மை கண்டறியும் பிரிவு சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் 3 யூ-டியூப் சேனல்கள் தவறான தகவல்களை இந்தியாவில் பரப்பியது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
நியூஸ் ஹெட்லைன்ஸ், சர்காரி அப்டேட், ஆஜ் தக் லைவ் ஆகிய இந்த 3 யூ-டியூப் சேனல்களும், உச்சநீதிமன்றம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய அரசின் திட்டங்கள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், விவசாயக்கடன் தள்ளுபடி உள்ளிட்டவை குறித்துப் பொய் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன.
வாக்குச்சீட்டுகள் மூலம் எதிர்வரும் தேர்தல்கள் நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு, ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் வங்கிக்கணக்கு வைத்திருப்போருக்கு மத்திய அரசு சார்பில் நிதியுதவி, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு தடை போன்ற பொய்யான செய்திகள் இந்த யூடியூப் சேனல்களில் வெளியிடப்பட்டிருக்கின்றன. மேலும் இந்த யூ டியூப் சேனல்கள் தங்கள் வீடியோக்களில் விளம்பரங்களைக் காட்டுவதும், தவறான தகவல்களைப் பணமாக்குவதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த 3 சேனல்களும் 33 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டிருப்பதும், அவர்கள் 30 கோடிக்கும் அதிகமான முறை இந்த தவறானத் தகவல்களைப் பார்த்திருப்பதும் தெரிய வந்துள்ளது. மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சத்தின் சார்பில் கடந்த ஓராண்டில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.