தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்போரை உலகிற்கு அம்பலப்படுத்த வேண்டும்- மத்திய உள்துறை மந்திரி பேச்சு
- ஆப்கானிஸ்தானில் தலிபான் அதிகார எழுச்சியால் உலகம் கடுமையான விளைவுகளை சந்தித்தது.
- லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புகள் பயங்கரவாதத்தை பரப்பி வருகின்றன.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் அளவிலான இரண்டு நாள் மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது. பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பது மற்றும் பயங்கரவாதம் தொடர்பான அதிகரிக்கும் சவால்களை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. இது கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளதாவது:
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தெற்காசியப் பிராந்தியத்தில் நிலைமை மாறியுள்ளது, அல்கொய்தா மற்றும் ஐஎஸ் அமைப்புகளின் செல்வாக்கு பிராந்திய பாதுகாப்பிற்கு பெரும் சவாலாக உள்ளது.
சோவியத் ஒன்றியம் உடைந்ததன் பின்னணியில், ஆப்கானிஸ்தானில் தலிபானின் அதிகார எழுச்சியால் உலகம் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதன் விளைவாக அமெரிக்க இரட்டை கோபுர கொடூர தாக்குதலை நாம் அனைவரும் பார்த்தோம்.
தெற்காசியப் பிராந்தியத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மாற்றங்கள் நம் அனைவரையும் கவலையடையச் செய்துள்ளது. அல்கொய்தாவுடன், தெற்காசியாவில் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற அமைப்புகளும் தொடர்ந்து பயங்கரவாதத்தை பரப்பி வருகின்றன.
பயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடங்களையோ அவர்களின் வளங்களையோ நாம் ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது. அவர்களுக்கு ஆதரவளிக்கும் மற்றும் ஆதரிப்போரின் இரட்டைப் பேச்சையும் நாங்கள் உலகிற்கு அம்பலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.