இந்தியா

மனைவியை கொன்று 400 கி.மீ. தூரம் உடலை எடுத்து சென்று எரித்த உ.பி. டாக்டர் கைது

Published On 2022-12-14 13:50 GMT   |   Update On 2022-12-14 13:50 GMT
  • உடலை சூட்கேசில் அடைத்து முதலில் தனது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
  • தன் மனைவி விபத்தில் இறந்துவிட்டதால் அவசரமாக தகனம் செய்வதற்கு செல்வதாக ஆம்புலன்ஸ் டிரைவரிடம் கூறியிருக்கிறார்

லக்னோ:

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி நகரைச் சேர்ந்தவர் டாக்டர் அபிஷேக். இவரது மனைவி வந்தனா அவாஸ்தி (வயது 28). இவர் ஆயுர்வேத மருத்துவர். இவர்கள் சீதாபூர் சாலையில் மருத்துவமனையை நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் 27ம் தேதி தன் மனைவி வந்தனாவை காணவில்லை என டாக்டர் அபிஷேக், கோத்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விலை உயர்ந்த சில பொருட்களை மனைவி எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் கணவன் அபிஷேக் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அவரது நடவடிக்கைகளை கண்காணித்தனர். பின்னர் அவரிடம் தீவிரமாக நடத்தப்பட்ட விசாரணையில், மனைவியை நவம்பர் 26ம் தேதி அடித்துக் கொலை செய்து உடலை சுமார் 400 கிமீ தொலைவில் கொண்டுபோய் எரித்தது தெரியவந்தது. இந்த கொலைக்கு அவரது தந்தையும் உடந்தையாக இருந்துள்ளார். இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுபற்றி ஏஎஸ்பி அருண் குமார் சிங் கூறுகையில், "நவம்பர் 26ம் தேதி ஏற்பட்ட சண்டையின்போது வந்தனா அவாஸ்தியை கொலை செய்த அபிஷேக், காணாமல் போனதாக புகார் கொடுத்துள்ளார். பின்னர் உடலை சூட்கேசில் அடைத்து தனது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு ஆம்புலன்சை வரவழைத்து சுமார் 400 கிமீ தொலைவில் உள்ள கார்ஹ் முக்தேஷ்வரில் வைத்து உடலை எரித்துள்ளார். ஆம்புலன்ஸ் டிரைவரிடம், தன் மனைவி விபத்தில் இறந்துவிட்டதால் அவசரமாக தகனம் செய்வதற்கு செல்வதாக கூறியிருக்கிறார்" என்றார்.

Tags:    

Similar News