2 புதிய கின்னஸ் சாதனைகளை படைத்த உ.பி. தீபத்திருவிழா
- தீபத்திருவிழாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கிய கவனம் செலுத்தப்படும் வகையில் விளக்குகள்.
- அரசு சார்பாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.
உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு கடந்த 2017-ம் ஆண்டு முதல் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் தீபோத்ஸவ் எனப்படும் தீபத்திருவிழாவை கொண்டாடி வருகிறது.
இதையொட்டி அயோத்தி சரயு நதிக்கரையில் 2017-ம் ஆண்டு 51 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. அதன் பிறகு 2019-ம் ஆண்டு 4.10 லட்சம் விளக்குகள், 2020-ம் ஆண்டு 9 லட்சத்துக்கும் அதிகமான விளக்குகள் ஏற்றப்பட்டன.
கடந்த 2022-ம் ஆண்டு 15 லட்சத்துக்கும் அதிகமான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. கடந்த ஆண்டு 22.3 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு அந்த சாதனை முறியடிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு தீபத்திருவிழாவுக்கு அயோத்தி சரயு நதிக்கரையில் உள்ள படித்துறைகளில் 25 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது. 25,12,585 லட்சம் விளக்குகளை அதிக அளவில் காட்சிப்படுத்தியதன் மூலம் சுற்றுலாத்துறை, உத்தரபிரதேச அரசு, மாவட்ட நிர்வாகம், அயோத்தியில் சாதனை படைத்துள்ளது.
இதேபோல், ஒரே நேரத்தில் அதிக மக்கள் விளக்குகளை ஆரத்தி எடுத்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம், இம்முறை இரண்டு கின்னஸ் சாதனைகளை உ.பி தீபத்திருவிழா படைத்துள்ளது.
இந்த தீபத்திருவிழாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கிய கவனம் செலுத்தப்படும் வகையில் விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளது.
மேலும், லேசர் ஒளி மூலம் ராம் - லீலா நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. அரசு சார்பாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.
மேலும் தீபத்திருவிழாவையொட்டி அயோத்தி ராமர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ராமர் கோவில் வளாகமும் அலங்காரத்தால் ஜொலிக்கிறது.
மேலும், தீபத்திருவிழாவின் பிரம்மாண்டம் நீடித்த உணர்வை ஏற்படுத்துவதை உறுதி செய்வதற்காக கோவிலின் பவன் தரிசனத்திற்காக கடந்த 29-ந் தேதி முதல் நவம்பர் 1-ந் தேதி நள்ளிரவு வரை திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.