சர்ச்சைக்குள்ளான பூஜா கேத்கரின் ஐஏஎஸ் தேர்ச்சியை ரத்து செய்தது யுபிஎஸ்சி
- ஓபிசி சான்றிதழ் முறைகேடு, உடல் ஊனம் குறைபாடு உள்ளவர் சான்றிதழ் என புகார் கூறப்பட்டது.
- விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பிய நிலையில் சரியாக விளக்கம் அளிக்காததால் ரத்து நடவடிக்கை.
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரைச் சேர்ந்தவர் பூஜா கேத்கர். இவர் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று பயிற்சி மேற்கொண்டு வந்தார். அப்போது பதவியை துஷ்பிரயோகம் செய்ததாக புகார் எழுந்தது. அத்துடன் போலி சான்றிதழ் வழங்கி ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றது தெரியவந்தது.
இது தொடர்பாக மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission- UPSC) விசாரணை நடத்தி வந்தது. இதற்கிடையே மகாராஷ்டிரா அரசு பயிற்சி பெறுவதற்கான அளித்த அனுமதியை ரத்து செய்தது.
இந்த நிலையில் பூஜா கேத்கரின் ஐஏஎஸ் தேர்ச்சியை யுபிஎஸ்சி ரத்து செய்துள்ளது. மேலும் யுபிஎஸ்சி நடத்தும் எந்த தேர்விலும் பங்கேற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு விதிமுறை மீறியது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
போலி அடையாள சான்றிதழ் கொடுக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி யுபிஎஸ்சி பூஜா கேத்கருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஜூலை 25-ந்தேதிக்குள் பதில் அளிக்கும்படி அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால, பூஜா ஆகஸ்ட் 4-ந்தேதி வரை அவகாசம் கேட்டிருந்தார் யுபிஎஸ்சி ஜூலை 30-ந்தேதி வரை காலஅவகாசம் கொடுத்தது. இதற்கு மேல் காலஅவகாசம் கொடுக்கப்படமாட்டாது என்பதை தெளிவாக தெரிவித்திருந்தது.
நோட்டீஸ்க்கு பதில் அளிக்காததால் யுபிஎஸ்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பூஜா கேத்கர், தன் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறிவிட்டார். விசாரணை மேற்கொண்டதில் தேர்வுக்கான விதிமுறையை மீறியது தெளிவாக தெரியவந்தது என யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது. பூஜா தனது பெயரை மாற்றியது மட்டுமல்ல பெற்றோரின் பெயரையும் மாற்றியது தெரியவந்துள்ளது.
பூஜா பயிற்சி காலத்தில் கார், ஸ்டாஃப், அலுவலகம் போன்ற சலுகைகள் கேட்பதாக புனே கலெக்டர் சுஹாஸ் திவாஸ் மகாராஷ்டிர மாநில தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதினார். இரண்டு வருட பயிற்சி காலத்தில் இதுபோன்று சலுகைகள் கேட்க அவருக்கு உரிமை இல்லை எனக் குறிப்பிட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து பூஜா வாஷிம்-க்கு மாற்றம் செய்யப்பட்டடார். இதில் இருந்துதான் பூஜா ஐஏஎஸ் தேர்வுக்காக செய்த மோசடிகள் வெளியில் தெரிய ஆரம்பித்தது.