இந்தியா

வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் தீர்ந்தன: 1-ந் தேதி வரை பக்தர்கள் வர வேண்டாம் என அறிவிப்பு

Published On 2023-12-25 07:20 GMT   |   Update On 2023-12-25 07:20 GMT
  • பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டன.
  • திருப்பதியில் நேற்று 63, 519 பேர் தரிசனம் செய்தனர்.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் வைகுண்ட ஏகாதசியொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டன.

இதேபோல் கடந்த 23-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை 10 நாட்களுக்கு வைகுண்ட வாசல் வழியாக பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு 4 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் 9 இடங்களில் பக்தர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டது.

இலவச தரிசன டிக்கெட் பெற ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். 4 லட்சம் இலவச தரிசன டிக்கெட் இன்று அதிகாலையுடன் தீர்ந்தது.

இதையடுத்து இலவச தரிசனம் டிக்கெட் வழங்கும் கவுண்டர்கள் மூடப்பட்டன. ரூ 300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டும் திருப்பதி மலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

திருப்பதி மலைக்கு செல்லும் பக்தர்கள் பஸ்சில் ஏறும்போது தரிசன டிக்கெட் உள்ளவர்கள் மட்டும் பஸ்சில் அனுமதிக்கப்படுகின்றனர்.

மற்ற பக்தர்கள் பஸ்சில் இருந்து கீழே இறக்கி விடப்படுகின்றனர். இதேபோல் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும் பக்தர்கள் அலிபிரி சோதனை சாவடியில் டிக்கெட் உள்ளதா என பரிசோதித்து திருப்பதி மலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

மற்ற பக்தர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.

கோவிலில் நேரடி இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வருகிற ஜனவரி 1-ந் தேதி வரை தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்கள் திருப்பதிக்கு வர வேண்டாம் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.இது குறித்த தகவல் தெரியாமல் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் தரிசன டிக்கெட் இல்லாமல் திரும்பி வருகின்றனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில் வைகுண்ட வாசல் தரிசன டிக்கெட்டு களை பக்தர்களுக்கு தேவஸ்தானம் தினமும் விநியோகித்து இருக்க வேண்டும்.

ஒட்டுமொத்தமாக விநியோகம் செய்ததால் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அவதி அடையாமல் இருக்க தேவஸ்தான அதிகாரிகள் மாற்று ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்என வலியுறுத்தினர்.

திருப்பதியில் நேற்று 63, 519 பேர் தரிசனம் செய்தனர். 26,424 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.5.5 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

Tags:    

Similar News