குடியரசுத் தலைவராக வேண்டும் என்று ஆசைப்பட்டதில்லை- வெங்கையா நாயுடு
- அந்த பதவி கிடைக்காததால் நான் அதிருப்தி அடையவில்லை.
- பதவியில் அமர்ந்த நாள் முதல் யார் மீதும் எனக்கு எந்தக் கோபமும் இல்லை.
கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து இந்தியாவின் 13-வது குடியரசு துணைத் தலைவராக பணியாற்றிய வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் 10ந் தேதியுடன் நிறைவு பெற்றதையொட்டி, பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று அவருக்கு பிரியாவிடை கொடுக்கப்பட்டது
அப்போது பேசிய மாநிலங்களவைத் தலைவரான வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளதாவது:
நாட்டின் குடியரசுத் தலைவராக வேண்டும் என்று நான் ஆசைப்பட்டதில்லை, அந்த பதவி கிடைக்காததால் நான் அதிருப்தி அடையவில்லை. இந்த பதவியில் அமர்ந்த நாள் முதல் யார் மீதும் எனக்கு எந்தக் கோபமும் இல்லை. நான் மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பேன், அவர்களுடன் தொடர்ந்து பழகுவேன்.
பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் விவாதிக்கவும், விவாதிப்பதற்கு இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும் என்றே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும்.
அரசியல்வாதிகளைப் பற்றிய இயல்பான உணர்வு எல்லா இடங்களிலும் குறைந்து வருகிறது, அவர்களை பற்றி மதிப்பு குறைந்து வருவதே இதற்குக் காரணம். அதை மனதில் வைத்து உங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்க வேண்டும்.
பாராளுமன்றம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். இப்போது மாணவர்கள், கிராமப்புற மக்கள் மற்றும் பிற பகுதி மக்கள் பாராளுமன்ற நடவடிக்கைகளைப் பார்க்கிறார்கள். அதனால்தான் சில நேரங்களில் நான் கண்டிப்புடன் இருக்கி வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.