தெலுங்கானாவில் ருசிகரம்: கே.சி.ஆர், ரேவந்த் ரெட்டியை தோற்கடித்த பா.ஜ.க. வேட்பாளர்
- தெலுங்கானாவில் காங்கிரஸ் 64 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
- ஆளும் கட்சியான பி.ஆர்.எஸ் 39 இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடந்து வருகிறது.
அதில், மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 60 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. அங்கு ஆளும் கட்சியான பி.ஆர்.எஸ் 40 இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் உள்ளதால் ஐதராபாத்தில் வெற்றியை கொண்டாடும் விதமாக ரேவந்த் ரெட்டி காரில் பேரணி சென்றார். அவரை தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
இந்நிலையில், தெலுங்கானாவின் கமாரெட்டி தொகுதியில் பி.ஆர்.எஸ் சார்பில் முதல் மந்திரி கே.சி.ஆர் மற்றும் காங்கிரஸ் சார்பில் ரேவந்த் ரெட்டியும், பா.ஜ.க. சார்பில் வெங்கட ரமண ரெட்டியும் போட்டியிட்டனர்.
இதில் பா.ஜ.க. வேட்பாளர் வெங்கட ரமண ரெட்டி சுமார் 6,741 வாக்குகள் வித்தியாசத்தில் கே.சி.ஆரையும், 11,736 வாக்குகள் வித்தியாசத்தில் ரேவந்த் ரெட்டியையும் தோற்கடித்து அசத்தியுள்ளார்.