இந்தியா

அரியானா காங்கிரஸ் தலைவரை சந்தித்த வினேஷ் போகத்

Published On 2024-08-24 07:27 GMT   |   Update On 2024-08-24 07:27 GMT
  • வினேஷ் போகத் ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியானது.
  • காங்கிரசில் வினேஷ் போகத் இணைந்தால் வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ மகளிர் மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத் அரையிறுதியில் வெற்றி பெற்றும், இறுதிக்கு போட்டிக்கு தகுதி பெற்ற பின்னர் அவர் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அவருக்கு பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் ஆதரவு தெரிவித்தனர்.

இதனையடுத்து சமீபத்தில் இந்தியா திரும்பிய வினேஷ் போகத்துக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அரியானா மாநில அரசு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தது.

வினேஷ் போகத் அரியானா மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அரியானாவில் முன்னாள் முதல்வரும் அம்மாநில எதிர்க்கட்சி தலைவருமான பூபிந்தர் சிங் ஹுடாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து வினேஷ் போகத் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தித்து பேசினர்.

வினேஷ் போகத்திடம் பேசிய பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பூபிந்தர் சிங் ஹுடா, "எங்கள் கட்சியில் இணைவது குறித்து வினேஷ் போகத் தான் முடிவு செய்யவேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சியில் அவர் இணைந்தால் வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். முடிவு அவர் கையில் தான் உள்ளது" என்று தெரிவித்தார்.

அரியானா மாநிலத்தில் சட்டசபையின் பதவிக்காலம் வருகிற நவம்பரில் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, அம்மாநிலத்திற்கு அக்டோபர் 1-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News