காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம்- ஆலய அறக்கட்டளை தகவல்
- தினமும் இரண்டு லட்சம் பேர் வரை தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
- காசி தமிழ் சங்கமத்தில் கலந்து கொள்ள 5-வது குழு வாரணாசி சென்றது.
உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 216 பேர் கொண்ட 5-வது குழு வாரணாசி சென்றது. வாரணாசி கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
விஸ்வநாதரை தரிசித்த பின் அன்னை அன்னபூரணி ஆலய வளாகத்திற்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு உணவு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வாரணாசியின் பல்வேறு பாரம்பரிய இடங்களுக்கும் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் இந்த குழுவினர் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில் காசி தமிழ் சங்கமம் என்பது கங்கை, காவிரி சங்கமத்திற்கு இணையானது என காசி விஸ்வநாதர் கோவில் அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர் வெங்கட்ரமண கனபாடிகள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
காசியில் கங்கை இருக்கிறது, விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காலபைரவர், சோயி அம்மன் இருக்கிறார்கள். கங்கையில், புனித நீராடவும், தரிசிக்கவும், தமிழ் நாட்டின் கிராமங்களில் உள்ளவர்கள் கூட ஒரு முறையாவது வரவேண்டும் என்று விரும்புவார்கள். தற்போது பக்தர்கள் கூடுதலாக வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் வருகையால் காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான உறவும் அதிகரித்துள்ளது.
விஸ்வநாதர் கோவில் முன்பு மிகக் குறுகலாக, சுமார் 1,000 பேர் வரைதான் ஏற்கெனவே தரிசனம் செய்ய முடியும் என்ற நிலையில் இருந்தது. தமிழ்நாட்டிலிருந்தும் தென்மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் காசிக்கு வருகிறார்கள் என்பதை அறிந்த பிரதமர் மோடி, கோவிலை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டார்.
இதனால் தற்போது தினமும் இரண்டு லட்சம் பேர் வரை தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதமாக கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுவதோடு பிரசாதமும் கொடுக்கப்படுகிறது.
விஸ்வநாதர் கோவிலுக்கு அருகிலேயே உள்ள மணிகர்னிகா தீர்த்தத்தை கையில் எடுத்து வந்து நேரடியாக விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்யும் அளவிற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. பாராயணங்களும், ஆன்மீக கச்சேரிகளும் நடைபெற வசதியாக தமிழக கோவில்களில் உள்ளதை போன்று விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் பிரமாண்டமான கலையரங்கு கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.