இந்தியா

மதசார்பின்மைக்கு குரல் கொடுத்து வந்த பாலி நாரிமன் - சிறு குறிப்பு

Published On 2024-02-21 09:55 GMT   |   Update On 2024-02-21 09:55 GMT
  • 1972ல் உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்ற தொடங்கினார் நாரிமன்
  • எமர்ஜென்சிக்கு எதிராக குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர் பாலி நாரிமன்

உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் காலமானார். அவருக்கு வயது 95.

சுமார் 70 வருட காலம் சட்டத்துறையில் பணியாற்றிய பாலி நாரிமன், 1929 ஜனவரி 10 அன்று மியான்மர் (அப்போது பர்மா) நாட்டின் தலைநகர் யாங்கோன் (அப்போதைய ரங்கோன்) நகரில் பிறந்தவர்.

1950ல் மும்பை (அப்போதைய பம்பாய்) நகரில், உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பதிவு செய்து, படிப்படியாக வளர்ந்து, 1961ல் மூத்த வழக்கறிஞராக உயர்ந்தார்.

1972ல் உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்ற தொடங்கினார்.


அரசியலமைப்பு சட்டம் (constitutional law) சம்பந்தமான சட்ட நுணுக்கங்களில் புகழ் பெற்ற வழக்கறிஞரான பாலி நாரிமன் பல முக்கிய வழக்குகளில் வாதாடி உள்ளார்.

தேசிய ஜுடிஷியல் அப்பாயின்ட்மென்ட்ஸ் கமிஷன் (NJAC) எனப்படும் நீதிபதிகள் நியமன ஆணைய வழக்கு, கொலிஜியம் (Collegium) எனப்படும் நீதிபதிகள் தேர்வு குறித்த உச்ச நீதிமன்ற "அட்வகேட்ஸ் ஆன் ரெகார்ட்" அணியினரின் (SC AoR Association) வழக்கு, சிறுபான்மையினரின் உரிமைகளுக்கான டிஎம்ஏ பய் (TMA Pai) வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளை கையாண்டவர் நாரிமன்.

1975 ஜூன் 25 அன்று, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த "எமர்ஜென்சி" உத்தரவிற்கு எதிராக தான் வகித்து வந்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (additional Solicitor General) பதவியை ராஜினாமா செய்தார் நாரிமன்.

பொதுமக்களின் உரிமைகள் மற்றும் மதசார்பின்மைக்காக குரல் கொடுத்து வந்தவரான அவர், நீதிமன்றங்களின் முக்கிய தீர்ப்புகளின் நிறை-குறைகளை பொது மக்களுக்கு புரியும் வகையில் சிறப்பாக விமர்சனம் செய்து வந்தார்.

அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை கடுமையாக விமர்சித்தவர் நாரிமன்.


சட்டக்கல்லூரி மாணவர்கள் விரும்பி பிடிக்கும் சட்ட நுணுக்கங்கள் சம்பந்தமான முக்கிய நூல்களில் ஒன்றான "பிஃபோர் மெமரி ஃபேட்ஸ்" (Before Memory Fades), "தி ஸ்டேட் ஆஃப் நேஷன்" (The State of Nation), "காட் சேவ் தி ஹானரபிள் சுப்ரீம் கோர்ட்" (God Save the Honourable Supreme Court) ஆகிய நூல்கள் நாரிமன் எழுதியவை.

1991ல் இந்திய அரசு பாலி நாரிமனுக்கு பத்ம பூஷன் விருதும், 2007ல் பத்ம விபூஷன் விருதும் வழங்கி கவுரவித்தது.

மேலும், 1999லிருந்து 2005 வரை நாரிமன் மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக பதவி வகித்தார்.

பாலி நாரிமனின் மகன் ரோஹிங்க்டன் நாரிமன் (Rohington Nariman) உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News