பூத் ஏஜென்ட்களை காவல் நிலையத்தில் அடைத்துள்ளனர்: மெகபூபா முப்தி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
- எங்கள் கட்சி தொண்டர்கள் எந்த காரணம் இன்றி போலீஸ் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
- டிஜி, எல்ஜி, என அனைத்து அலுவலகங்களின் உயர் அதிகாரி முதல் எல்லோரும் இதில் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் இன்று இரண்டு தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் இன்று காலை மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார். அவருடன் அவரது கட்சி தொண்டர்களும் போராட்டத்தில் குதித்தனர். பாதுகாப்பு படையினர் தங்களது கட்சி ஏஜெண்டுகளை பணியாற்ற விடாமல் தடுப்பதாக கூறி மெகபூபா மறியலை மேற்கொண்டார். அவரை பாதுகாப்பு படையினர் சமரசம் செய்தனர். இதனால் அனந்த்நாக் தொகுதியில் சில இடங்களில் ஓட்டுப்பதிவு சற்று தாமதம் ஆனது.
இது தொடர்பாக மெகபூபா முப்தி கூறிகையில் "எங்கள் கட்சி தொண்டர்கள் எந்த காரணம் இன்றி போலீஸ் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். டிஜி, எல்ஜி, என அனைத்து அலுவலகங்களின் உயர் அதிகாரி முதல் எல்லோரும் இதில் ஈடுபட்டுள்ளனர். காவல் நிலையத்தில் பூத் ஏஜென்ட்களை அடைத்து வைத்துள்ளனர்.
சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடைபெற வேண்டும் என்று சொல்கிறீர்கள். ஆனால் இந்த விசயங்கள் அனைத்தையும் நீங்கள் செய்கிறீர்கள். வாக்கு எந்திரத்தில் முறைகேடு செய்ய இருப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது" என்றார்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு நேற்று மெகபூபா முப்தி கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.