இந்தியா (National)

சேரில் உட்கார்ந்து ராமாயணம் பார்ப்பதா.. கீழே தள்ளி அடித்த உ.பி. போலீஸ் - தலித் நபர் தற்கொலை

Published On 2024-10-12 10:28 GMT   |   Update On 2024-10-12 11:17 GMT
  • போலீஸ் கான்ஸ்டபிள்கள் சந்த் -இன் கழுத்தில் இருந்த துண்டை பிடித்து இழுத்து சேரில் இருந்து கீழே தள்ளியுள்ளனர்
  • அழுதுகொண்டே, நாடகம் பார்க்க வந்தவர்களிடம் தான் செய்த தவறு என்ன என்று கேட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நவராத்திரியை முன்னிட்டு நடந்த ராம்லீலா நாடகத்தை நாற்காலியில் உட்கார்ந்து பார்த்ததாகத் தலித் நபரை போலீசார்  தாக்கியுள்ளனர். உ.பி. மாநிலம் காஸ்கஞ்ச்[Kasganj] மாவட்டத்தில் உள்ள சலேம்பூர் கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நவராத்திரி விழாவை முன்னிட்டு ராமாயண புராணக் கதைகளைக் கூறும் ராம்லீலா நாடக நிகழ்ச்சி நடந்துள்ளது.

இந்த நாடகத்தைப் பார்க்க ஆவூரைச் சேர்ந்த சந்த் [Chand] [ 48 வயது நபர்] வந்துள்ளார். அங்கு காலியாக கிடந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்து நாடகம் பார்த்துக்கொண்டிருந்தார். தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நாற்காலியில் உட்கார்ந்து ராமாயண நாடகத்தைப் பார்த்ததால் கொதிப்படைந்த சாதிய வக்கிரம் கொண்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பாதுகாப்புக்கு வந்த காவல்துறையினர் சிலரை ஏவி சந்த் -ஐ அடிக்க வைத்துள்ளனர். அந்த போலீஸ் கான்ஸ்டபிள்கள் சந்த் -இன் கழுத்தில் இருந்த துண்டை பிடித்து இழுத்து சேரில் இருந்து கீழே தள்ளி சாதிப் பெயரைச் சொல்லி திட்டி மிதித்தும் சரமாரியாக அடித்தும் உள்ளனர்.

இதனால் சந்த் அழுதுகொண்டே, நாடகம் பார்க்க வந்தவர்களிடம் தான் செய்த தவறு என்ன என்று கேட்டுள்ளார். ஆனால் அவரது கேள்விக்கு யாரும் பதிலளிக்கவில்லை. பின் அங்கிருந்து தனது வீட்டுக்கு வந்த சந்த் தனது மனைவி ராம் ரதியிடம் நடந்ததைக் கூறியுள்ளார்.

திங்கள்கிழமை காலை எழுந்து பார்க்கும்போது தனது கணவர் வீட்டுக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை மனைவி ராம் ரதி பார்த்துள்ளார்.  இந்நிலையில் இதுதொடர்பாக மனைவி ராம் ரதி போலீசில் மேற்கூறியபடி நடத்தவை குறித்து புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் தொடர்பாகப் பேசிய காவல்துறை கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் ராஜேஷ் பாரதி, ராம்லீலா நிகழ்ச்சிக்கு மதுபோதையில் வந்த சந்த் மேடை மீது ஏறி அமர்ந்துள்ளார்.அவரை அப்புறப்படுத்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் போலீஸ் உதவியை நாடியுள்ளனர். எனவே அவரை போலீஸ் மேடையில் இருந்து இறக்கியுள்ளது. அதன்பின் அவர் பத்திரமாக வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் காலையில் அவர் தூக்கில் தொங்கியுள்ளார். இதுதொடர்பாக விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். சந்த் தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளை விவசாய வேலைகள் செய்து காப்பாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News