இந்தியா

சிட்டிசன் படத்தின் அத்திப்பட்டி போல் அழிந்த கிராமம் - அதிர்ச்சி தகவல்

Published On 2024-08-02 03:22 GMT   |   Update On 2024-08-02 03:22 GMT
  • இந்த குக்கிராமத்தில் 118 குடும்பத்தினர் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
  • நிலச்சரிவுடன் ஆர்ப்பரித்து வந்த காட்டாற்று வெள்ளம் அந்த குக்கிராமத்தை மண்ணோடு மண்ணாக மூடியது.

வயநாடு:

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டகை, சூரல்மலை மற்றும் மேப்பாடி ஆகிய கிராமங்களில் கடந்த 30-ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். இன்னும் பலர் காணாமல் போயினர். அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் அந்த கிராமங்கள் தவிர அதை சுற்றி இருந்த ஒரு சில குக்கிராமங்களும் நிலச்சரிவில் சிக்கி இருந்த இடம் தெரியாத அளவிற்கு சிதைந்து போயுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அதில் ஒன்றுதான், பூஞ்சிரித்தோடு குக்கிராமம். இது முண்டகை கிராமத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் மலைபாங்கான இடத்தில் அமைந்து இருந்தது. இந்த குக்கிராமத்தில் 118 குடும்பத்தினர் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரே நாள் இரவில் அந்த குக்கிராமம் காணாமல் போனது. நிலச்சரிவுடன் ஆர்ப்பரித்து வந்த காட்டாற்று வெள்ளம் அந்த குக்கிராமத்தை மண்ணோடு மண்ணாக மூடியது.

அங்கு வசித்து வந்த மக்களின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. தமிழ் சினிமாவில் அஜித்குமார் நடித்த சிட்டிசன் திரைப்படத்தில் அத்திப்பட்டி என்ற கிராமம் காணாமல் போனது போல காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். அந்த அத்திப்பட்டியை நினைவூட்டுவது போல பூஞ்சிரித்தோடு கிராமமும் அழிந்து போயிருக்கலாம் என்று அக்கம்பக்கத்து ஊரை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News