'நாங்கள் காணாமல் போகவில்லை': கிண்டலாக பதிலளித்த தலைமை தேர்தல் ஆணையர்
- நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
- இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி துவங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.
நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "காணாமல் போன தேர்தல் ஆணையர்கள்' என சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் பகிரப்படுவதை நாங்கள் பார்த்தோம். நாங்கள் எங்கும் காணாமல் போகவில்லை. இங்கேயேதான் இருக்கிறோம். இப்போது காணாமல் போன தேர்தல் ஆணையர்கள் மீண்டும் வந்துவிட்டார்கள் என்று மீம்ஸ் போடலாம் என்று கிண்டலாக பேசினார்.
மேலும் பேசிய அவர், "2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 540 இடங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. ஆனால் இந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் 39 இடங்களில் மட்டும் தான் மறுவாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு இணங்க, வாக்கு எண்ணிக்கையின்போது தபால் வாக்குகள் முதலில் எண்ணத் தொடங்கப்படும். தபால் வாக்குகளை எண்ணத் தொடங்கி 30 நிமிடங்களுக்கு பிறகே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்" என்று தலைமை தேர்தல் ஆணையர் உறுதி அளித்துள்ளார்.